தனது பிறந்த நாளில் சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி: தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தனது பிறந்த நாளில் சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி: தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்

அகமதாபாத்: பிரதமர் மோடி தனது 67வது பிறந்த நாளான இன்று, குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும்  தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.

பிரதமர் மோடி இன்று தனது 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் வந்துள்ளார். நேற்று விமானம் மூலம் அகமதாபாத் வந்த பிரதமர் மோடியை கவர்னர் ஓ. பி. ஹோலி, முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று இரவு காந்திநகர் வந்த மோடி, அங்கு கவர்னர் மாளிகைக்கு சென்றார். பின்னர் பாஜ தலைவர்களை சந்தித்து டிசம்பரில் வரவிருக்கும் குஜராத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் பாஜ தலைவர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு  தாயார் ஹீரா பென் இல்லத்திற்கு சென்றார். அங்கு தாயாரிடம் ஆசி பெற்றார்.

பின்னர் அங்கிருந்து நர்மதா அணை அமைந்துள்ள இடத்திற்கு சென்றார். முன்னதாக 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் படேல் சிலை அமைய உள்ள இடமான சாதுபேட் சென்று சிலைக்கான பணிகளை பார்வையிட்டார்.
சர்தார் சரோவர் அணை திட்டத்துக்கு இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு எதிர்ப்புகள், தடங்கல்களை தாண்டி 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணை திட்டப்பணி முழுமை பெற்றுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி அதன் உயரமானது ஏற்கனவே இருந்த 121. 92 மீட்டரில் இருந்து 138. 68 மீட்டராக உயர்த்தப்பட்டது.

இதன் மூலம் சர்தார் சரோவர் அணையின் கொள்ளளவு முந்தைய 1. 27 மில்லியன் கன மீட்டரில் இருந்து தற்போது 4. 73 மில்லியன் கன மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன் பெறும்.

சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். மேலும் 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இதன் மூலம் குடிநீரும் கிடைக்க வாய்ப்புள்ளது.



இன்று காலை 11 மணிக்கு தபோய் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் நர்மதா அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின்படேல், முன்னாள் முதல்வர் ஆனந்தி படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் அங்கு சுதந்திர போராட்ட பழங்குடியினர் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதே போல் பிற்பகல் 3. 30 மணி அளவில் மிகப் பெரிய சந்தை வளாகத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் அம்ரேலியில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கடந்த 13ம் தேதி குஜராத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து புல்லட் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து தற்போது கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக குஜராத் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை