இமாச்சல் பிரதேசம், குஜராத் தேர்தல் எதிரொலி ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராகிறார்: சோனியா தீவிர ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இமாச்சல் பிரதேசம், குஜராத் தேர்தல் எதிரொலி ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராகிறார்: சோனியா தீவிர ஆலோசனை

புதுடெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களை முன்னிட்டு ராகுலை விரைவில் காங்கிரஸ் தலைவராக அறிவிப்பது குறித்து சோனியா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல் நலக்குறைவை தொடர்ந்து அவரால் கட்சி மற்றும் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கட்சி மற்றும் அரசியல் பொறுப்புகளை பெரும்பாலும் ராகுல் கவனித்து வருகிறார்.
இதற்கிடையில் வருகிற 2019ம் ஆண்டு வரவிருக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய சோனியா விரும்புகிறார்.

இதற்காக உள்ளுர் நிர்வாகிகள் தொடங்கி உயர் மட்ட தலைவர்கள் வரை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாகவே ராகுலை தலைவராக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த சில தேர்தல்களில் காங்கிரஸ் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

இதனால் ராகுலை தலைவராக்குவதில் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும் கட்சிக்குள் ராகுல் மேற்கொண்ட மாற்றங்கள் காரணமாகவே தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் பிரியங்காவை தலைவராக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தசூழலில்தான் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய சோனியா திட்டமிட்டுள்ளார். மேலும் குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ளன.

எனவே அதை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அண்மையில் அமெரிக்காவில் பேசிய ராகுல், பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், ராகுல் தலைவராக இதுதான் சரியான தருணம்.

அவர் விரைவில் உள்கட்சி தேர்தல் மூலமாக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என சூசகமாக தெரிவித்தார். டெல்லி அல்லது பெங்களூரில் அடுத்த மாத இறுதியில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறும் என கூறப்படுகிறது. எனவே இதில் காங்கிரஸ் தலைவராக ராகுலை அறிவிக்கலாம் என சோனியா திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அதே நேரத்தில் பிரியங்கா தலைவராகவும், ராகுல் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற பேச்சும் மற்றொரு தரப்பினர் மத்தியில் நிலவி வருகிறது.    எனவே விரைவில் வரவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டில் ராகுலை தலைவராக அறிவிப்பதற்கான ஆலோசனையில் சோனியா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவிக்கு 82 பேரும், பொது குழு உறுப்பினர் பதவிக்கு 689 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலிடத்தின் செல்வாக்கை பெறுவதற்கான பதவிகள் என்பதால் இப்போதே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஒரே முட்டல்களும் மோதல்களும் உருவாகியுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.


.

மூலக்கதை