பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் இருந்த போது, சமாஜ்வாடியின் மூத்த தலைவரும், அகிலேஷூக்கு நெருக்கமானவருமான முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காயத்ரி பிரஜாபதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் கடந்த மார்ச் 15ம் தேதி லக்னோவில் தலைமறைவாக இருந்த காயத்ரி பிரஜாபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் அவருக்கு நீதிபதி மிஸ்ரா கடந்த 25ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து உத்தரபிரதேச அரசு சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என பொய்யான தகவலை கூறி பிரஜாபதி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் அவரது ஆவணங்களை சரிபார்க்காமல் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி மிஸ்ராவையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை