டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர் சுப்பிரமணிய சாமி சொல்கிறார்

PARIS TAMIL  PARIS TAMIL
டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர் சுப்பிரமணிய சாமி சொல்கிறார்

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரன் உண்மையிலேயே தேர்தல் கமிஷனில் யாருக்காவது லஞ்சம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் என்றால் அது குறித்து தீவிரமாக விசாரித்து சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும்.

ஆனால் இது குறித்த போலீசார் விசாரணையின்போது, அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அதற்கான சட்டவிதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப்பிரிவு அந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷனுடன் இணைக்கக் கூடாது.

புரியவில்லை

டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய சகாக்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால் டெல்லி போலீசார் தேர்தல் கமிஷனுக்கும் இந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்தக் கூடாது.

என்னால் இன்னும் இந்த வழக்கை முழுதாக புரிந்து கொள்ள முயவில்லை. இது தேர்தல் கமிஷனில் யாருக்கோ லஞ்சம் அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கா?

அப்படி என்றால் சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி. தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் எப்படி முடிவு எடுத்தது? இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராமல் தேர்தல் கமிஷன் எதற்கு முடக்க வேண்டும்? சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருந்தால் இந்த லஞ்ச குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம்.

தனித்தனி வழக்குகள்

ஒரு அமைப்புக்கு லஞ்சம் தருவது மற்றும் ஹவாலா பரிவர்த்தனை இரண்டும் தனித்தனி வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக்கூடாது.

எது எப்படி இருந்தாலும் என்னுடைய பார்வையில் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்துள்ளது. பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் இருக்கும் நிலையில், ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை தனக்கு ஒதுக்குமாறு எப்படி கேட்க முடியும் என்பதே விந்தையாக இருக்கிறது.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார். 

மூலக்கதை