ஒடிசா முதல்வர் கோரிக்கை: ரயில்வே அமைச்சர் ஒப்புதல்

தினமலர்  தினமலர்
ஒடிசா முதல்வர் கோரிக்கை: ரயில்வே அமைச்சர் ஒப்புதல்

புதுடில்லி: ஒடிசா மாநிலத்தில் புதிய ரயில் வழித்தடத்திற்கு டுவிட்டர் மூலம் அம்மாநில முதல்வர் வைத்த கோரிக்கைக்கு 3 நிமிடங்களில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இத்திட்டம் குறித்து அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்திலிருந்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் டுவிட்டர் ஐ.டி.யை டேக் செய்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த சுரேஷ் பிரபு, எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தை கையெழுத்திடலாம் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கான நிதியில் மாநில அரசின் பங்கு 50 சதவிகிதம் இருக்கும் எனவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்கள் மூலமாக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது மற்றும் மேற்கண்டவாறு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் உத்வேகத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை