அ.தி.மு.க.,வும்.. நள்ளிரவு சம்பவங்களும்...

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க.,வும்.. நள்ளிரவு சம்பவங்களும்...

சென்னை: ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தினகரன் கைது வரை நடந்த நள்ளிரவு சம்பவங்களால் அ.தி.மு.க., ஆட்டம் கண்டுள்ளது.

அப்பல்லோவில் ஜெ.,:


2016 செப்.,22ம் தேதி நள்ளிரவில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை நடந்த போதும், டிச.,5ம் தேதி இரவு 11 மணிக்கு, ஜெ., உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெ., சமாதியில் பன்னீர்:


அடுத்த முதல்வராக தன்னை நியமிக்க சசிகலா காய் நகர்த்திய வேளையில், பன்னீர் வைத்தார் அடுத்த செக். 2017, பிப்.,7ம் தேதி இரவில் ஜெ., சமாதியில் தியானத்தை துவக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். நள்ளிரவில் நடந்த பன்னீர், சசிகலாவின் செய்தியாளர்கள் சந்திப்பு, பரபரப்பான குற்றச்சாட்டுகள் என அன்றைய தினம் தமிழகத்துக்கு தூங்கா இரவாகவே கழிந்தது.

இடைத்தேர்தல் ரத்து:


சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன், அ.தி.மு.க.,வின் துணை பொதுச்செயலராக தினகரன் நியமிக்கப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய தினகரனுக்கு அடுத்த முட்டுக்கட்டை போட்டது தேர்தல் ஆணையம். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரால், ஏப்., 9ம் தேதி நள்ளிரவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள்:


தினகரனால் கட்சிக்கு ஆபத்து என கூறிய அ.தி.மு.க., அமைச்ச்கள் அவருக்கு எதிராக ஏப்., 18ம் தேதி இரவில் போர்க்கொடி தூக்கினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.,வின் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்பதாக தினகரன் அறிவித்தார்.

தினகரனுக்கு சம்மன்:


சுகேஷ் சந்தரை, 1.30 கோடி ரூபாய் ரொக்கத்துடன், டில்லி போலீசார், கைது செய்தனர். விசாரணையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 50 கோடி ரூபாய் பேரம் பேசியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஏப்.,19ம் தேதி இரவு தினகரன் வீட்டிற்கே வந்து சம்மன் தந்தனர் டில்லி போலீசார்.

தினகரன் கைது:


இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக, 4- வது நாளாக, நடந்த விசாரணையின் முடிவில், தினகரன் நேற்று(ஏப்.,25) நள்ளிரவு, டில்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவு சம்பவங்கள்:


அப்பல்லோவில் ஜெ., அனுமதிக்கப்பட்து வரை தினகரன் கைது வரை நடந்த நள்ளிரவு சம்பவங்களால் அ.தி.மு.க.,வில் சசி குடும்பத்தின் பிடி விலகியுள்ளது என்றே கூறலாம். இனி மன்னார்குடி குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல், அ.தி.மு.க.,வின் கடிவாளம் பன்னீர் மற்றும் பழனிசாமி ஆகிய இரு அணிகளின் கையில் மட்டுமே இருக்கும் என பேசப்படுகிறது.

மூலக்கதை