விவசாயிகள் போராட்டம் வாபஸ்: டெல்லியில் களையிழந்தது ஜந்தர்மந்தர்

PARIS TAMIL  PARIS TAMIL
விவசாயிகள் போராட்டம் வாபஸ்: டெல்லியில் களையிழந்தது ஜந்தர்மந்தர்

விவசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டம் நடந்ததால் அது இந்திய அளவில் பிரதிபலித்தது.

போராட்டம் நடைபெற்ற ஜந்தர்மந்தர், ஒரு மைதானம் போல இருக்காது. எந்நேரமும் போக்குவரத்து நடைபெறும் சுமார் 1 கி.மீ. தூரம் உள்ள தார்சாலை. இந்த சாலையின் அகலம் சுமார் 40 அடி, நடைமேடை பகுதி இரு பக்கத்திலும் தலா சுமார் 15 அடி.

கூடாரம் அமைத்து

பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் இந்த ரோட்டில் பல போராட்டங்கள் நடைபெறும். மற்றபடி அரசு வேலை நாட்களில் அவ்வப்போது போராட்டம் நடைபெறுவது உண்டு. சில அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்துவார்கள். இதற்காக சாலையின் நடைமேடை பகுதியில் கூடாரம் அமைக்கப்படும்.

இந்த கூடாரங்களில் அந்த அமைப்பினர் மாதக்கணக்கில் தங்குவதும் உண்டு. சிலர், கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்தும் சாப்பிடுவார்கள். இதுபோன்ற கூடாரங்களை ஆக்கிரமிப்பு என்று கருதி டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அகற்றுவது வழக்கம். அதன்படிதான் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

முக்கிய பிரமுகர்கள்
போராட்டம்

ஜந்தர்மந்தர் ரோட்டை போராட்டகளமாக அனுமதிப்பதற்கு முன்பு, இந்தியா கேட் பகுதியிலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டன. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியா கேட் அருகே, பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டம் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தது.

அதன்பிறகு தான் ஆட்சியாளர்கள் ஆலோசனை நடத்தி ஜந்தர்மந்தர் ரோட்டை போராட்ட களமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த ஜந்தர்மந்தரில் அன்னாஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

காமராஜர் கால் பட்ட இடம்

ஜந்தர்மந்தர் வழியாக பாராளுமன்றத்துக்கு செல்லலாம். இதனால் தான் ‘பாராளுமன்றம் நோக்கி பேரணி’ நடத்தும் போராட்டக்காரர்கள் இந்த வழியாக வருவார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் இந்த ரோட்டில் தான் முன்பு செயல்பட்டு வந்தது. காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது இந்த அலுவலகத்தில் அமர்ந்து தான் செயல்பட்டார். எனவே, அவரது கால்தடம் பதிந்த ஜந்தர்மந்தர் பகுதியை வரலாற்று சிறப்புமிக்க பகுதி என்றால் மிகையாகாது. மேலும் கேரள மாநில அரசு இல்லம் இந்த ரோட்டிலேயே அமைந்து உள்ளது.

களையிழந்தது

இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற ஜந்தர்மந்தர் ரோட்டில் தமிழக விவசாயிகள் 41 நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கேயே உண்டு, உறங்கி வந்தனர். தினமும் போராட்ட களத்தில் இருந்து கேரள இல்லம் அருகில் போலீசார் அமைத்திருந்த தற்காலிக தடுப்பு வேலி வரை கோ‌ஷமிட்டு செல்வார்கள். இதனால் அந்த ரோடு எந்நேரமும் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தை கைவிட்டு, இரவோடு இரவாக விவசாயிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று ஜந்தர்மந்தர் ரோடு களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது.
 

மூலக்கதை