டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ்

PARIS TAMIL  PARIS TAMIL
டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

41-வது நாளாக போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய நதிகளை இணைக்கவேண்டும், விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபக்க மீசையை மழித்துக்கொள்வது, நிர்வாண போராட்டம், மண்சோறு சாப்பிடுவது என ஒவ்வொரு நாளும் நூதன முறையில் விவசாயிகள் போராடி வந்தனர்.

அவர்களை அரசியல் தலைவர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள், நடிகர்கள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

என்றாலும், தங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்றால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் கூறி வந்தனர். நேற்று 41-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இந்த நிலையில், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நேற்று காலை 7.30 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது, அய்யாக்கண்ணு வழங்கிய மனுவை பெற்றுக்கொண்ட அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் சொல்வதாக உறுதி அளித்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோரும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், முதலில் விவசாயிகளுடைய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். மக்களுடைய பேராதரவின் மூலமாக அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன், விவசாயிகளின் கடன்களை முதலில் ரத்து செய்து கையெழுத்திட்டார்.

தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்ததின் காரணமாக, 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது.

ஏரிகளை தூர்வாருதல்

வறட்சியால் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். பிரதமர் நரேந்திர மோடியை நான் நேரில் சந்தித்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்தேன். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.2 ஆயிரத்து 247 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகையெல்லாம் வங்கியின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு, புதியதாக பயிர் செய்த விவசாயிகளுக்கும் தமிழக அரசால் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீர்நிலைகளில் இருக்கின்ற நீரை சேமித்து வைக்கவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி, அதற்கு ரூ.100 கோடியை முதற் கட்டமாக ஒதுக்கி, 1,519 ஏரிகள் இப்பொழுது தூர் வாரப்பட்டு வருகின்றன

வேண்டுகோள்

மேலும், இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகின்றது. இங்கே விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு, பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள் பிரதமரிடம் வலியுறுத்தி கூறப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, 41 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற தமிழக விவசாய பிரதிநிதிகள் தங்களுடைய உண்ணாவிரதத்தை முடித்து, போராட்டத்தை கைவிட்டு, தமிழகத்திற்கு திரும்பவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பிரதமரிடம் வலியுறுத்தினேன்

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மாலையில் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.

அங்கு அவர் நிருபர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தேன். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியும் பேசினேன். காலையில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவுடன் எனது மனுவையும் இணைத்து பிரதமரிடம் அளித்தேன். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சொன்னேன். அதை அவர் கனிவோடு கேட்டுக்கொண்டார்” என்று கூறினார்.

‘நீட்’ தேர்வு பற்றியும், தமிழக மாணவர்களின் நிலையையும் விளக்கியதாகவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கேட்டுக்கொண்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் பிரச்சினைகளை பிரதமரிடம் முதல்- அமைச்சர் வலியுறுத்திய தகவல் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு பிற விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, 41 நாட்களாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதை அய்யாக்கண்ணு அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காக கடந்த 41 நாட்களாக நாங்கள் ரோட்டிலேயே அமர்ந்து, ரோட்டிலேயே படுத்து போராட்டம் நடத்தி வந்தோம். இந்த நிலையில் முதல்-அமைச்சர் இங்கு வந்து எங்களை பார்த்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி தமிழகம் வாருங்கள் என்றனர்.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

இப்படி எல்லா கட்சி தலைவர்களும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நியாயம் கிடைக்கும் என்று சொல்லி இருப்பதால் அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

25-ந் தேதி (நாளை) தமிழகத்தில் நடைபெறும் முழு அமைப்பு போராட்டத்தில் நாங்கள் பங்கேற்போம். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்படாவிட்டால் மே மாதம் 25-ந் தேதி மீண்டும் நாங்கள் டெல்லிக்கு வந்து போராட்டத்தை தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் ஊருக்கு புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள். 

மூலக்கதை