அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி; ஜெ.தீபா பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி; ஜெ.தீபா பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சந்தேக மரணத்துக்கு நீதி...

விழாவை தொடர்ந்து ஜெ.தீபா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் சந்தேக மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தீர்ப்பு அமையும். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவின் பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என நம்புகிறேன்.

டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ஜெயலலிதாவினால், விரட்டி அடிக்கப்பட்டு, ஒட்டு மொத்த தமிழக மக்களாலும் வெறுக்கப்பட்டு அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டவர்.
முதல்–அமைச்சர் பதவிக்கே களங்கம்

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது, சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். தமிழக முதல்–அமைச்சராக இருந்து கொண்டு, சசிகலாவை சின்னம்மா என அழைத்து தான் வகித்து வந்த பதவிக்கே களங்கம் விளைவித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.

மதுசூதனன் தான் முதன் முதலில் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை நீங்கள் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என அழைத்தவர். ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் ஆட்சியை தக்க வைப்பதிலேயே குறியாக உள்ளனர். இவர்கள் தமிழக மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றோ, தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்றோ நினைப்பது இல்லை.
இரட்டை இலை சின்னம் முடக்கம்

தற்போதைய தமிழக அரசு முற்றிலும் செயல் இழந்து உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டனர். கட்சியையும், சின்னத்தையும் மீட்டு எடுப்பதற்காகவே இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. பணம் கொடுத்து ஏமாற்ற பார்ப்பவர்களை மக்கள் முறியடிக்க வேண்டும். தற்போதைய முதல்–அமைச்சரின் வழிகாட்டுதலில், அவரது நேரடி பார்வையில் பணம் பட்டுவாடா நடக்கிறது. இதனை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்துக் கொண்டு இருக்கும் மக்கள் இது போன்ற அரசியல்வாதிகளை ஓட விட வேண்டும்.
தி.மு.க.தான் பிரதான எதிரி

நல்லதொரு அரசாங்கம் எனது தலைமையில் இயங்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்தியாவிலேயே தலைசிறந்த தொகுதியாக ஆர்.கே.நகர் தொகுதியை மாற்றுவேன் என உறுதி கூறுகிறேன். தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். பள்ளி, கல்லூரி, கோவில் தலங்கள், குடியிருப்புகள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவேன். இந்த தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய நவீன மீன்மார்க்கெட்டை ஏற்படுத்தி தருவேன்.

இந்த இடைத்தேர்தலில் பிரதான போட்டியாளராக எனக்கு எதிராக தி.மு.க.வைத்தான் கருதுகிறேன். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு உகந்த இடம் அ.தி.மு.க.வில் இல்லை. நாளை(இன்று) முதல் இந்த தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருக்கிறேன். இந்த தொகுதியில் 100 சதவீதம் வாக்குகள் எனக்கு கிடைக்கும். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை