விசாரணை கமிஷன் அமைத்தால் உண்மை வெளியே வரும்: பன்னீர்

தினமலர்  தினமலர்
விசாரணை கமிஷன் அமைத்தால் உண்மை வெளியே வரும்: பன்னீர்

''விசாரணை கமிஷன் அமைத்தால் தான், ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: ஜெ., மரணத்தில், தமிழக மக்களின் மனதில் தீராத வடுவாக, பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. மருத்துவமனையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை, தினமும் சந்திப்பேன். அவரிடம், 'ஜெ.,க்கு வெகு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. போதிய சிகிச்சை அளிக்க, வசதி இல்லை என்றால், அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம். அதை, சசிகலா குடும்பத்திடம் கூறுங்கள்' என்றேன்.

அவரும் கூறியுள்ளார். அதற்கு, 'சிகிச்சை நல்லபடியாக போகிறது' எனக்கூறி உள்ளனர். இந்த செய்தி, மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எட்டியது. மருத்துவமனை நிர்வாகமும், 'எங்கள் மருத்துவமனை மீது, நம்பிக்கை இல்லையா?' என, தம்பிதுரையிடம் கேட்டுள்ளனர்.

இன்னொரு செய்தியை, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறினேன். 'ஜெ., சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினால் தான், நம்மை அனைவரும் நம்புவர். ஜெ.,க்கு ஏதாவது நடந்தால், கட்சியினர், நம்மை வீடு தேடி வந்து தாக்குவர்; வீட்டை சூறையாடக்கூடிய நிலை ஏற்படும்' என, கூறினேன். அந்த விஜயபாஸ்கர், இன்று, விசாரணை கமிஷன் அமைத்தால், என்னை விசாரிக்க வேண்டும் என, கூறுகிறார்.

நான் டாக்டர் கிடையாது; மருத்துவ முறை குறித்து எதுவும் தெரியாது. ஆனால், விஜயபாஸ்கருக்கு தெரியும். அவர் தான், குழுத் தலைவர். சிகிச்சை குறித்து, அவர் என்னிடம் கூறவில்லை. அவர் தான், சிகிச்சை போதுமானதாக இல்லை என்றால், வெளிநாட்டிற்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். மக்கள் சந்தேகப்படுவதால், விசாரணை கமிஷன் அமைத்தால், நம்மை நிரூபிக்க வாய்ப்பு ஏற்படும் என, கூறினேன். மக்களுக்கும் தெளிவு ஏற்படும். உரிய விசாரணை கமிஷன் அமைத்தால் தான், ஜெ., மரணத்தில் உள்ள மர்மத்திற்கு, விடை கிடைக்கும். அதுவரை, தர்ம யுத்தம் தொடரும்.

நான் முதல்வராக இருந்த போது, அதிகாரிகளை அழைத்து, 'மக்களிடம் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. எனவே, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என்றேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், விசாரணை கமிஷன் அமைப்போம். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

மூலக்கதை