ஹைட்ரோ கார்பன் எடுக்க போவதாக கூறப்பட்ட பகுதி காரைக்கால் அல்ல... தமிழக பகுதியே : புதிய தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழகத்தில் நெடுவாசலில் மட்டுமின்றி நாகை மாவட்டத்திலுள்ள ஓரிடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுக்க தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் காரைக்கால் அந்த பட்டியலிலேயே இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காரைக்காலில் செயல்படுத்தப் போவதாக கூறப்பட்டு வந்த அந்த திட்டமும், அங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள நாகை மாவட்டத்திற்குட்பட்ட இடத்தில் கொண்டு வரப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து விட்டு திரும்பிய புதுவை முதல்வர் நாராயணசாமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். புதுவை மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தர்மேந்திர பிரதான் உறுதிபட கூறியதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் எடுக்க தேர்வு செய்யப்பட்ட நாகை மாவட்டத்திற்குட்பட்ட அந்த பகுதியை காரைக்கால் அசெட்ஸ் என்ற பெயரில் O.N.G.C அழைப்பதால் , அது காரைக்கால் பகுதி என தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

மூலக்கதை