காஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பிடிக்க முயன்ற வீரர்கள் மீது கும்பல் கல்வீச்சு: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றபோது சிலர் கற்களை வீசி  வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், பத்காம் மாவட்டம்  சதுரா பகுதியில்  தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து, பதிலுக்கு வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்நிலையில்,  அப்பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை  கலைப்பதற்காக வீரர்கள் பெல்லட் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது கழுத்தில்  குண்டு பாய்ந்ததில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். சற்று நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.வீரர்கள் கூட்டத்தை கலைக்க முயன்றபோது சிதறி ஓடியதில் 17 பேர் காயமடைந்தனர்.  போராட்டக்காரர்களின் வன்முறை சம்பவத்தை  அடுத்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து  வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை