சிவசேனா எம்பியின் டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்தது ஏர் இந்தியா

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: சிவசேனா எம்பியின் டிக்கெட்டை ஏர் இந்தியா விமான நிறுவனம் மீண்டும் ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் தொகுதி எம்பி ரவீந்திர கெய்க்வாட். சிவசேனா கட்சியை சேர்ந்தவர். கடந்த வாரம் 23ம் தேதி புனேயில்  இருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது பிசினஸ் இருக்கைக்கு பதில் சாதாரண வகுப்பு இருக்கை ஒதுக்கீடு  தொடர்பாக எழுந்த பிரச்னையில் ஏர்இந்தியாவின் துணை மானேஜரும், 62 வயது மூத்த அதிகாரியுமான சுகுமாரை செருப்பால் அடித்தார். இதனால் ஏர் இந்தியா நிறுவனம் கெய்க்வாட் எம்பிக்கு விமானத்தில் பயணிக்க நிரந்தர தடை விதித்தது. இதேபோல் மற்ற 7 தனியார் விமான நிறுவனங்களும் கெய்க்வாட் பயணம் செய்ய தடை விதித்தன. சம்பவம் நடந்த மறுநாளே டெல்லியில்  இருந்து புனே செல்ல கெய்க்வாட் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். அந்த டிக்கெட்டை ஏர் இந்தியா ரத்து செய்து விட்டது. இதையடுத்து  இண்டிகோ விமானம் மூலம் கெய்க்வாட் மும்பை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். அந்த டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது.  இதனால் அவர் ரயில் மூலம் மும்பை திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ரவீந்திர கெய்க்வாட் சார்பில்  அவரது உதவியாளர் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். அந்த டிக்கெட்டை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்து விட்டது. இதுதொடர்பாக  ஏர் இந்தியா நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “எம்பியை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது. அவர் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், எங்கள் நிறுவன ஒப்புதல் இல்லாமல் பயணம் செய்ய முடியாது” என்று  தெரிவித்தார். இது விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர  எம்பி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அதேபோல் அடிவாங்கிய சுகுமார் கொடுத்த புகாரின்பேரில் எம்பி மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை