ஆணையங்களில் தலைவர் பதவி காலி விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிசி ஆணையங்களில் தலைவர் பதவி நிரப்பப்படாத விவகாரம் மாநிலங்களவையில் நேற்று 2வது நாளாக  எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க விதி எண் 267ன் கீழ் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள்  அவையின் மையப்பகுதியில் வந்து, இந்த விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பினர். இந்த விஷயத்தில் அரசு பொய்யான தகவல்களை கூறி  அவையை தவறாக வழி நடத்துகிறது என அவர்கள் கூறினர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், ‘‘அரசியல் சாசன அந்தஸ்து உள்ள ஆணையங்களில் பல பதவிகளை நிரப்பாமல் பா.ஜ  அரசு நீண்ட காலமாக காலியாக வைத்துள்ளது. இந்த பதவிகள் எப்போது நிரப்பப்படும்?’’ என்றார். இதற்கு பதில் அளித்த தகவல் மற்றும்  ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘‘அனைத்து ஆணையங்களும் முறையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அங்கு காலி  பணியிடங்களை நிரப்பும் பணி நடக்கிறது. பி.சி ஆணையத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை, அதன் தலைவர் வரவேற்றுள்ளார். ஆனால் இதுகுறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் மக்களுக்கு பரப்புகின்றனர்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட அவையின் துணைத்  தலைவர் குரியன், ‘‘காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதனால் உறுப்பினர்கள் தங்கள்  இருக்கைக்கு செல்ல வேண்டும்’’ என்றார். இதை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவையை 10 நிமிடங்கள் ஒத்தி  வைத்தார். பின் அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.* மாநிலங்களவை எம்பிக்களின் மொத்த எண்ணிக்கை 250. இவர்களில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள்  ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்படுவர். * மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். முதல் கூட்டம் 1952 மே 13ல் தொடங்கியது.

மூலக்கதை