'ரூ.1,500 கோடியை செலுத்துங்க!': சுப்ரதா ராய்க்கு கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
ரூ.1,500 கோடியை செலுத்துங்க!: சுப்ரதா ராய்க்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி: முதலீட்டாளர்களிடம் வாங்கிய, 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாயை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக, சஹாரா குழும நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், 2014ல், கைது செய்யப்பட்டார்.

முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக, சுப்ரதா ராய் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, அந்த பணத்தை திரட்டுவதற்காக, அவருக்கு சுப்ரீம் கோர்ட், 'பரோல்' வழங்கியது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் கூறியதாவது: முதலீட்டாளர்களின் பணத்தை, 'செபி'யிடம், செலுத்துவதாக கூறிய, 1,500 கோடி ரூபாயில், முதல் தவணையாக, 552 கோடி ரூபாயை செலுத்துவதாக, சுப்ரதா ராய் தெரிவித்திருந்தார். ஆனால், 247 கோடி ரூபாயை மட்டுமே செலுத்த முடிந்தது. மீதமுள்ள தொகையை, ஆகஸ்டுக்குள் செலுத்தி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:சுப்ரதா ராய், மீதமுள்ள தொகையை அவர் கூறியபடி செலுத்தலாம்; எனினும், ஜூன் மாத்திற்குள் செலுத்துவதாக கூறிய, 1,500 கோடி ரூபாயை, செப்., 7க்குள் செலுத்த வேண்டும்; அதற்கு மேல் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை