வட மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வட மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சுரேந்தர் நகர், ராஜ்கோட், மோர்பி, அம்ரெலி, ஜுனாகத், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.



கனமழைக்கு குஜராத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இங்கு சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு அதிகமுள்ள இடங்களில் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதேபோல், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், அசாம், திரிபுரா, சிக்கிம், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை