சகாயம் தலைமையிலான கிரானைட் விசாரணை அலுவலகத்தை மூட உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சகாயம் தலைமையிலான கிரானைட் விசாரணை அலுவலகத்தை மூட உத்தரவு

மதுரை : மதுரையில் உள்ள கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் விசாரணை அலுவலகத்தை வரும் 31ம் தேதிக்குள் மூடுமாறு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், பொருட்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளால், அரசுக்கு ரூ. 16 ஆயிரத்து 400 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக கடந்த 2014ல் அப்போதைய கலெக்டர் சகாயம் அறிக்கை அனுப்பினார். இந்த முறைகேடு தொடர்பாக சகாயம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் கடந்த 2014, செப்.

11ல் உத்தரவிட்டது. இதையடுத்து 2014 டிச. 3ல் மதுரையில் தனி அலுவலகம் அமைத்து, சகாயம் தனது விசாரணையை துவக்கினார்.

விசாரணை காலம் ஒரு ஆண்டு நீடித்தது. மேலும் சகாயத்துக்கு 3 முறை கொலை மிரட்டல் வந்தது.

ஒரு வழியாக கடந்த 2015 அக். 9ம் தேதி, தனது விசாரணையை முடித்துக் கொண்டு சகாயம் சென்னை சென்றார். இறுதி அறிக்கையை தயார் செய்து, நவ. 23ம் தேதி  ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அறிக்கையில், ‘கிரானைட் குவாரிகளால் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி கொள்ளை நடந்திருப்பதாகவும், இதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இந்த விசாரணைக்காக தமிழக அரசு ரூ. 58 லட்சம் செலவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரை விசாரணை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளம், மின்சார கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் என ரூ. 5 லட்சம் கேட்டு சகாயம் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 3 ஆண்டுகளாக இயங்கி வந்த விசாரணை அலுவலகத்தை வரும் 31ம் தேதிக்குள் மூட சகாயத்திற்கு ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர் சேர், மேஜை ஆகியவற்றை கனிமவளத்துறை மற்றும் வருவாய்த் துறையிலும், ஆவணங்களை பதிவாளரிடம் ஒப்படைப்பதற்கான முதற்கட்ட கணக்கிடும் நடவடிக்கையில் அலுவலக ஊழியர்கள் நேற்று முதல் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அடுத்த வாரம் மதுரை வரும் சகாயம் இந்த ஆவணங்களையும், பொருட்களையும் உரிய துறைகளிடம் ஒப்படைக்க உள்ளார்.

.

மூலக்கதை