கடன் தள்ளுபடி கேட்பது நாட்டில் பேஷனாகிவிட்டது: வெங்கையா நாயுடு கருத்தால் சர்ச்சை

தினகரன்  தினகரன்

மும்பை: கடன் தள்ளுபடி தற்போது பேஷனாகிவிட்டது. இது இறுதியான தீர்வு அல்ல’’ என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்த  கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பருவமழை பொய்த்ததால் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாடு  முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்தன. உ.பி.யில் ஆட்சியை பிடித்த பா.ஜ அரசு, ரூ.36,359 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது.  இதையடுத்து மகாராஷ்டிரா அரசு ரூ.30,500 கோடி விவசாயக் கடனை ரத்து செய்தது. அதன்பின் பஞ்சாப் அரசு ரூ.24,000 கோடி விவசாயக் கடனை  ரத்து செய்தது. நான்காவது மாநிலமாக கர்நாடகா அரசு ரூ.8 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தது. இந்நிலையில், இது தொடர்பாக மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கடன் தள்ளுபடி கேட்பது  தற்போது பேஷனாகிவிட்டது. கடனை வாங்கியவர்கள் அதை செலுத்தாதது சரியா? இது யாருடைய பணம்? அது மக்களின் வரிப்பணம். இது  இறுதியான தீர்வு அல்ல என்றார். வெங்கையா நாயுடுவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில், விவசாயிகளை இந்த அளவுக்கு யாரும் கேவலப்படுத்த முடியாது என்றார். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், விவசாயிகள் தற்கொலை பேஷனாகிவிட்டது என இந்த அரசு  கூறுமா? அவர்களை கேலி செய்யக் கூடாது’’ என குறிப்பிட்டுள்ளார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறுகையில், ‘‘பணக்காரர்களின்  கடன்களையும் அரசு ரத்து செய்கிறது. அது பேஷனாக தெரியவில்லையா? விவசாயிகள் கடன் ரத்தை மட்டும் பேஷனாக பார்ப்பது ஏன்? ஒரு  குறிப்பிட்ட நபரின் கடனை ரத்து செய்கிறீர்கள். ஆனால் கோடிக்கணக்கான விவசாயிகள் கடனை ரத்து செய்வதில்லை. இதுதான் பா.ஜ.வின் அரசியல்  என்றார்.

மூலக்கதை