பிரதமர் மோடி முன்னிலையில் பாஜ வேட்பாளர் இன்று மனுத்தாக்கல்:தமிழகம், ஆந்திரா, தெலங்கானா முதல்வர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜ வேட்பாளர் ராம்நாத்  கோவிந்த் பிரதமர் முன்னிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். ஆந்திரா, தெலங்கானா  மற்றும் தமிழ்நாடு முதல்வர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகின்றது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தெலுங்குதேசம் கட்சி, தெலங்கானா ராஷ்டிரிய சமீதி உள்ளிட்டவை தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர  முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலுக்கு ராம்நாத்  கோவிந்த் சரியான தேர்வு” என்றார். தெலங்கானா முதல்வரும் தனது  கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் பாஜ வேட்பாளருக்கு ஆதரவை  தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் அதிமுகவின் இரு பிரிவினரும்  ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்  வெங்கையா நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் வேட்பு மனு  தாக்கலின்போது பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு ஆகியோரும் டெல்லி வந்துள்ளனர். எனவே பாஜ வேட்பாளர்  ராம்நாத் கோவிந்த் இன்று வேட்பு மனுத்தாக்கல்  செய்யும்போது ஆந்திரா,  தமிழகம் மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள்  பங்கேற்பார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த சில முதல்வர்கள்  மற்றும் எம்பிக்கள் வேட்பு மனுத் தாக்கலில் பங்கேற்பார்கள் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலக்கதை