தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு நிதிஷ் ஆதரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு நிதிஷ் ஆதரவு

பாட்னா: பாஜ ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ராம்நாத் கோவிந்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராம்நாத்தை ஆதரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ராம்நாத் கோவிந்த்தை வேட்பாளராக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். எனவே, அவரது ஆதரவும் கிடைக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் ராம்நாத்தை ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

சீதாராம் யெச்சூரி, மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும் இடம்பெற்றிருந்த நிலையில்தான் பாஜ ஆதரவு வேட்பாளர் ராம்நாத்துக்கு, நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில கவர்னராக ராம்நாத் பணியாற்றியவர் என்பதாலும் இந்த முடிவை நிதிஷ்குமார் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பீகார் அரசில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ராம்நாத்தை ஆதரிக்கப்போவதில்லை என அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார், லாலு பிரசாத் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை