லக்னோவில் நடந்த சர்வதேச யோகா தினத்தில் மோடி பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
லக்னோவில் நடந்த சர்வதேச யோகா தினத்தில் மோடி பேச்சு

2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றவுடன் யோகா கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பயனாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

3-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதிலும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவே பிரதமர் மோடி லக்னோ சென்றுவிட்டார்.

மழை கொட்டியது

பிரதமரின் யோகா நிகழ்ச்சி காலை 6.30 மணிக்கே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் நள்ளிரவு 2 மணி அளவில் இருந்தே ஏராளமானோர் மைதானத்தில் குவிந்துவிட்டனர்.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் யோகா பயிற்சியில் ஈடுபட வந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமயோசிதமாக தங்களுக்கு வழங்கப்பட்ட யோகா பயிற்சிக்கான தரை விரிப்பையே நனையாமல் இருக்க பயன்படுத்திக் கொண்டனர். எனினும் நகரில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முதல் நாளே அறிவித்து இருந்ததால் ஏராளமானோர் குடைகளை பிடித்தும் வந்திருந்தனர்.

மோடியின் யோகா பயிற்சி செயல்விளக்கத்தையொட்டி மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நிகழ்ச்சி நேரப்படி காலை 6.30 மணிக்கு மைதானத்துக்கு வந்தார். அப்போதும் பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தரையும் ஈரமாக காணப்பட்டது. எனினும் இதைப் பொருட்படுத்தாமல் யோகா நிகழ்ச்சி தொடங்கியது.

45 நிமிட பயிற்சி

பிரதமர் வெள்ளை நிற டி-சர்ட்டும், தொளதொள டிரவுசரும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக 3 முறை ஓம் என்ற மந்திரம் உச்சரிக்கப்பட்டது. அதையடுத்து பிரதமர் யோகா பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் அவர் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து யோகாவில் ஈடுபட்டார். அப்போதும் மழை தூறியபடியே இருந்தது. எனினும், மோடி 51 ஆயிரம் பேர் முன்னிலையில் யோகா பயிற்சி தொடர்ந்தார். பல்வேறு ஆசனங்களையும் அப்போது மோடி செய்து காட்டினார்.

அவர் யோகா பயிற்சியில் ஈடுபடுவதை பார்த்து மைதானத்தில் கூடியிருந்தவர்களும் அதே வழிமுறையை பின்பற்றுவதற்காக ஆங்காங்கே எல்.சி.டி.திரைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

சுமார் 45 நிமிடங்கள் மோடி யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பயிற்சி செய்தனர். காலை 8 மணி வரை யோகா நிகழ்ச்சி நடந்தது.

பாதுகாக்கவும் உதவும்

முன்னதாக பிரதமர் மோடி, யோகா பயிற்சியின்போது மழை பெய்ததை நகைச் சுவையாக குறிப்பிட்டார்.

வாழ்க்கைக்கு யோகா மிகவும் அவசியம் என்ற செய்தியை மட்டும் இங்கே யோகா ஆர்வலர்கள் பரப்பவில்லை. தங்களை காத்துக்கொள்ள யோகா தரைவிரிப்புகள் எப்படி உதவுகிறது என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

பெரும்பாலான நாடுகளுக்கு நமது மொழிகளின் வளம், பாரம்பரியம், கலாசாரம் பற்றி தெரியாது. ஆனால் தற்போது யோகா கலை உலக நாடுகளை இந்தியாவுடன் இணைத்துள்ளது. மனம், ஆன்மாவை யோகா கலை இணைக்கிறது. இதனால்தான் உலகத்தை இக்கலை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முன்பெல்லாம் குறிப்பிட்ட முனிவர்கள், ஞானிகள் மட்டுமே இமயமலையில் யோகா செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இன்று அனைவருடைய வாழ்விலும் யோகா ஒரு அங்கமாகிவிட்டது.

பழக்கமாக்கி கொள்ளுங்கள்

24 மணி நேரமும் யோகா செய்யவேண்டும் என்பது அவசியமில்லை. தினமும் 50 முதல் 60 நிமிடங்கள் செய்தாலே போதுமானது. ஏனென்றால் உடல், மனம், அறிவுக்கு யோகா நல்லது. இது 125 கோடி இந்தியர்களும், உலகினர் அனைவரும் இதன் மூலம் நல்ல மனிதர்கள் என்ற நிலைய அடைய இயலும். இதனால் கிடைக்கும் மனித நேயத்தால் அனைத்து பிரச்சினைகளையும் கடந்து விடலாம்.

உப்பு ஒரு பண்டத்துடன் சேரும்போது அந்த பண்டம் சுவை மிகுந்ததாக மாறுகிறது. அதேபோன்ற முக்கியத்துவத்தை யோகாவும் பெறுகிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு செலவும் தேவையில்லை. எனவே யோகாவை அனைவரும் தங்களது அன்றாட வாழ்வின் ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் யோகா பயிற்சி மையங்கள் அதிகரித்து இருப்பதால் யோகா பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மோடி மைதானத்தில் இருந்து புறப்பட்ட போது அவரை ஏராளமான மாணவ-மாணவிகள் சூழ்ந்து கொண்டு ஆர்வமுடன் கைகுலுக்கினர்.

நிகழ்ச்சி முடிந்ததும், லக்னோவில் இருந்து மோடி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
 

மூலக்கதை