அமைச்சர் தலை வழுக்கை ஏன்?: சபையில் ஜாலியான விவாதம்

தினமலர்  தினமலர்
அமைச்சர் தலை வழுக்கை ஏன்?: சபையில் ஜாலியான விவாதம்

சென்னை: 'அமைச்சர் ஜெயகுமாரின் தலை வழுக்கையானது ஏன்?' என்பது குறித்து, சட்டசபையில், நேற்று சுவாரசியமான விவாதம் நடந்தது.

கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - முருகுமாறன்: காட்டுமன்னார்கோவில் தொகுதி, இலால்பேட்டையில் உள்ள, மீன் வளர்ப்பு பண்ணையை விரிவுபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ஜெயகுமார்: தற்போதுள்ள பண்ணையில், 8.20 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 4.50 ஏக்கர் பரப்பளவில், மீன் வளர்ப்பு குளங்கள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீன் புரதச்சத்து நிறைந்தது; மீன் சாப்பிட்டால், கண் பார்வை நன்றாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறியதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'அப்புறம் ஏன் நீங்கள் கண்ணாடி அணிந்துள்ளீர்கள். தலை வழுக்கையாக உள்ளது' என, கேட்டதும், சபையில் சிரிப்பலை எழுந்தது.
சபாநாயகர்: அமைச்சர் அதிகம் மீன் சாப்பிடுகிறார்.
அமைச்சர் ஜெயகுமார்: தலை வழுக்கை, மரபணு காரணமாக வருகிறது. என் தந்தைக்கு தலை வழுக்கை; அதே போல், எனக்கும் வழுக்கை விழுந்துள்ளது. நான் மீன் சாப்பிடுவதால், கண் பார்வை நன்றாகவே உள்ளது; படிக்கும் போது மட்டும், கண்ணாடி அணிகிறேன்.
முருகுமாறன்: சென்னையில், 'ஆன்லைன்' மூலம் மீன் விற்பனை துவக்கப்பட்டது போல, கிராமங்களில், 'ஸ்டால்' அமைத்து, மீன் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஜெயகுமார்: தற்போது தேவைப்படும் இடங்களில், மீன் அங்காடி அமைத்து, மீன் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

மூலக்கதை