நீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
நீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார்.

அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவர் கோவை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு கோவை போலீசாரின் ஒத்துழைப்புடன், மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அந்த வீட்டை கொல்கத்தா போலீசார் முற்றுகையிட்டனர்.

ஆனால், பத்திரிகையாளர்கள் வராமல் நான் வெளியே வரமாட்டேன் என்று கூறி, போலீசாருடன் கர்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேரம் கழித்து, அவரை கைது செய்த போலீசார், கோவை விமான நிலையத்துக்கு தனி வாகனத்தில் அழைத்து சென்றனர்.

அங்கு நீதிபதி கர்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் நீதித்துறையில் ஊழல் மலிந்து கிடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் ஊழல் நடக்கிறது. அதற்கு எதிராக குரல் கொடுத்ததால்தான், என்னை கைது செய்கின்றனர். நான் குற்றவாளி அல்ல. என்னை கைது செய்த போலீசார், எவ்வித தொந்தரவும் கொடுக்கவில்லை.

ஏற்கனவே நான் நீதிபதிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தேன். ஆனால், தலித் சமூகத்தை சேர்ந்த எனது உத்தரவை யாரும் மதிக்கவில்லை. நாட்டு மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், நீதிபதி கர்ணன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.  இன்று கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

மூலக்கதை