ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; முதல்–அமைச்சர் அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; முதல்–அமைச்சர் அறிவிப்பு

அவரது விளக்கத்தை ஏற்கமறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து பேச அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் அனுமதி வழங்கிய பின்னர் நடந்த விவாதம் வருமாறு:–

மு.க.ஸ்டாலின்:– தேர்தல் ஆணையம், தலைமை செயலாளருக்கு ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது. அதில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் சில அமைச்சர்கள் மீதும் வழக்கு தொடர வற்புறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அவையை ஒத்திவைத்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.

சபாநாயகர் தனபால்:– காலையில் தான் இதுபற்றிய கோரிக்கையை என்னிடம் கொடுத்தீர்கள். இருந்தாலும் தகவல் கோருதல் அடிப்படையில் முதல்–அமைச்சரை பதில் அளிக்க அழைக்கிறேன்.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது பற்றி விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.)

பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசியதாவது:–

வைரக்கண்ணன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டுள்ளார். அதைப்பற்றி தான் இங்கு எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவரும் பிரச்சினை எழுப்பியிருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வருமான வரித்துறை சோதனையின்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரியே முதல் தகவல் அறிக்கை (வழக்கு) பதிவு செய்திட ஏதுவாக புகார் மனு அளித்திட வலியுறுத்துகிறது.

அதன்தொடர்பாக, பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.
முதல்–அமைச்சர் பதிலில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.

மூலக்கதை