ஜூலை 1ல் நாடு முழுவதும் அமலாவதால் ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறும்: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜூலை 1ல் நாடு முழுவதும் அமலாவதால் ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறும்: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வரும் விதமாக ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது.

காஷ்மீர் தலைநகர் நகரில் கடந்த மாதம் 19ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 1,200 பொருட்கள் மற்றும் 500 சேவைகளுக்கு 5,12,18 மற்றும் 28 என நான்கு விதமாக ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 15வது கூட்டத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு புதிய வரி விகிதமாக 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16வது கூட்டம் டெல்லியில் கடந்த 11ம் தேதி நடந்தது.    இதில் சினிமா டிக்கெட், இன்சூலின், ஊறுகாய், அகர் பத்தி உட்பட 66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 17வது கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது.

இதில் மாநில நிதியமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஜிஎஸ்டி நெட் வொர்க்கில் இணைய இன்னும் தயாராகவில்லை எனவும், அதனால் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதை ஒத்திபோடும்படிவர்த்தக நிறுவனங்களும், கம்பெனிகளும் வலியுறுத்தின.

இதை ஒத்திபோடுவதற்கான நேரம் நமக்கு இல்லை. ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் இணைவதற்கு ஏற்படும் தாமதத்தை ஈடுகட்ட, வியாபாரிகளுக்கு இரண்டு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.   செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், ஜிஎஸ்டி வரி அமலாவதற்கு முதல் நாளான வரும் 30ம் தேதி நடக்கிறது. அதில் நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,  நேற்று நடந்த கூட்டத்தில் முக்கியமாக லாட்டரி மீதான வரி குறித்து விவாதித்தோம்.

இதில் மாநில அரசு நடத்தும் லாட்டரிக்கு 12 சதவீத வரியும், மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற லாட்டரிக்கு 18 சதவீத வரியும் விதிக்க சம்மதிக்கப்பட்டது. ஓட்டல், விடுதிகள் வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 2, 500 முதல் ரூ. 7,500 வரை 12 சதவீத வரியும், ரூ. 7500 க்கு மேல் வசூலிக்கும் விடுதிகளுக்கு 28 சதவீத வரியும் விதிக்கப்படும் என்றார்.

.

மூலக்கதை