ஜூலை 1–ந் தேதி முதல் சரக்கு, சேவை வரி அமல்!! கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

PARIS TAMIL  PARIS TAMIL
ஜூலை 1–ந் தேதி முதல் சரக்கு, சேவை வரி அமல்!! கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

சரக்கு, சேவை வரி ஜூலை 1–ந் தேதி அமலாகிறது. முதல் 2 மாதங்களுக்கு கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிமுறையினை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.

இந்த வரிவிதிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் பல முறை கூடி, 1,200–க்கும் மேற்பட்ட பொருட்கள், சேவைகள் மீதான வரிவிதிப்பு விகிதத்தை முடிவு செய்தது.

கடைசியாக கடந்த 11–ந் தேதி கூடியபோது, 66 பொருட்கள், சேவைகள் மீதான வரி மாற்றி அமைக்கப்பட்டது. அந்த வகையில், ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. கூடுதல் கட்டணங்களை கொண்ட சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லாட்டரி மற்றும் மின்னணு பில்கள் (இ–வே பில்) மீதான வரி விதிப்பு குறித்து முடிவு செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 17–வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இதன் உறுப்பினர்களாக உள்ள தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயகுமார் உள்ளிட்ட மாநில நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:–

* மாநில அரசுகள் நடத்துகிற லாட்டரிக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

* மாநில அரசுகள் அங்கீகாரம் பெற்று தனியாரால் நடத்தப்படுகிற லாட்டரி மீது 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* குளுகுளு வசதி கொண்ட ஓட்டல் (லாட்ஜ்) கட்டணத்தின் மீதான சரக்கு, சேவை வரி முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.1,800 முதல் ரூ.7,500 வரையிலான கட்டணத்துக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.7,500 மற்றும் அதற்கு அதிகமான கட்டணத்துக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* மின்னணு பில்கள் மீதான வரி விதிப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளதால், இன்னும் ஆழமான ஆலோசனை நடத்த முடிவு செய்யப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திட்டமிட்டபடி ஜூலை 1–ந் தேதி சரக்கு, சேவை வரிமுறை அமல்படுத்தப்படும்.

வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் விற்பனை கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கு தயார் ஆகாத நிலையில் உள்ளனர். எனவே முதல் 2 மாதங்களுக்கு அவகாசத்தை சிறிது தளர்த்துவதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுத்துள்ளது. ஜூலை மாத விற்பனை கணக்கு விவரங்களை ஆகஸ்டு மாதம் 10–ந் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 5–ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.

ஆகஸ்டு மாத கணக்குகளை செப்டம்பர் 10–ந் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 20–ந் தேதிக்குள் தாக்கல் செய்ய அவகாசம் தரப்படுகிறது.

இந்த சலுகை ஜூலை, ஆகஸ்டு ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும்தான். செப்டம்பர் மாதம் முதல் காலவரையறை கடுமையாக பின்பற்றப்படும்.

டெல்லியில் 30–ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடும். அன்று நள்ளிரவு ஒரு விழா நடத்தி, ஜி.எஸ்.டி. வரிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை