ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் விரைவில்!!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் விரைவில்!!!

பா.ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் 23–ந்தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
ஜனாதிபதி தேர்தல்

அடுத்த மாதம் (ஜூலை) 17–ந்தேதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகிய 3 பேர் கொண்ட மூவர் குழுவை பா.ஜனதா அமைத்தது.

இதில் ராஜ்நாத் சிங்கும், வெங்கையா நாயுடுவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை அண்மையில் சந்தித்து பேசினர்.

எனினும் இவர்களது சந்திப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் இப்பிரச்சினையில் இழுபறி நீடிக்கிறது. மேலும் இரு தரப்பிலும் யார் வேட்பாளர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
23–ந்தேதிக்கு முன் அறிவிப்பு

இந்த நிலையில், லண்டனில் இருதய நோய்க்காக சிகிச்சை பெற்று டெல்லி திரும்பிய லோக் ஜன் சக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வானை நேற்று அவருடைய வீட்டுக்கு சென்று வெங்கையா நாயுடு சந்தித்தார். அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார். அப்போது இரு தலைவர்களும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்பு நிருபர்களிடம் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் வருகிற 23–ந்தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும். பிரதமர் மோடி அறிவிக்கும் வேட்பாளரை லோக் ஜன்சக்தி ஆதரிக்கும் என்று ராம்விலாஸ் பஸ்வான் உறுதி அளித்தார்’’ என்றார்.

மூலக்கதை