ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் சோனியாவுடன் பா.ஜனதா குழு சந்திப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் சோனியாவுடன் பா.ஜனதா குழு சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பா.ஜனதா குழு சந்தித்து பேசியது. எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சோனியாவுடன் சந்திப்பு

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25–ந்தேதி நிறைவு அடைகிறது. இதையொட்டி, ஜூலை 17–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 28–ந்தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை அமைத்து உள்ளார். இவர்கள் ஜூன் 16–ந்தேதி சோனியா காந்தியை சந்தித்து பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த சந்திப்பு நேற்று நடந்தது.

நிதிமந்திரி அருண்ஜெட்லி தென்கொரியா சென்று இருப்பதால், அவர் தவிர மூவர் குழுவில் உள்ள மற்ற 2 தலைவர்களான ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய எண்.10 ஜன்பத் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
முன்னேற்றம் ஏற்படவில்லை

பா.ஜனதா தலைவர்களின் இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உடன் இருந்தனர். இரு தரப்பிலும் வெகு நேரம் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் பொதுவாக நிறுத்தக்கூடிய வேட்பாளர் பெயர் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே கூறும்போது, ‘‘ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை முடியும்வரை பா.ஜனதா தலைவர்கள் குறிப்பிட்ட எந்த ஒருவரின் பெயரையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஒருமித்த கருத்து என்பது பற்றிய கேள்வியே எழவில்லை’’ என்றார்.
மீண்டும் சந்திப்பார்கள்

குலாம்நபி ஆசாத் கூறுகையில், ‘‘பா.ஜனதா தலைவர்கள் யாருடைய பெயரையாவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சொல்லவில்லை. அதேநேரம் எங்களிடம் யாருடைய பெயரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா? என்று கேட்டனர். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை அவர்கள் எங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது மனதில் யாருடைய பெயராவது இருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெயரும் எங்களது சந்திப்பின்போது கூறப்படவில்லை. அவர்கள் பெயரை குறிப்பிட்டால் மட்டுமே அதுபற்றி விவாதிக்கமுடியும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஆளும் கட்சி தரப்பினர், இன்னும் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட சில பெயர்களுடன் காங்கிரஸ் தலைமையை (சோனியா) மீண்டும் சந்திப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
எதிர்க்கட்சிகள் உறுதி

ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் குறிப்பிடுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலைவர்களுடன் வெங்கையா நாயுடு தொடர்பு கொண்டு உள்ளார். அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல் பட்டேல், பகுஜன் சமாஜ் தலைவர் சதீஷ் மிஸ்ரா ஆகியோருடன் சம்பிரதாய முறையில் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார்’’ என்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று அறிவித்து உள்ளது. இதேபோல் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, தனது தெலுங்கு தேசம் கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று ஏற்கனவே உறுதி அளித்து இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை பொதுவேட்பாளர் மதசார்பற்றவராக இருக்கவேண்டும், அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியை கொண்டவராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. எனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயரை தெரிவித்தால் மட்டுமே அதுபற்றிய பேச்சுவார்த்தை இருதரப்பிலும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

ஒருவேளை இதில் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான ஒருவேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை