தீவிரவாத தளபதி உள்பட 13 பேர் சுட்டு கொலை: வன்முறை வெடித்ததால் காஷ்மீரில் ஊரடங்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாத தளபதி உள்பட 13 பேர் சுட்டு கொலை: வன்முறை வெடித்ததால் காஷ்மீரில் ஊரடங்கு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத தளபதி கொல்லப்பட்டதையடுத்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதற்கு பாக். கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவன் பர்கான் வானி. இவன் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டான்.   இதைத் தொடர்ந்து, காஷ்மீர்  முழுவதும் வன்முறை வெடித்தது.

சுமார் 6 மாதமாக முற்றிலும் தொடர்ச்சியாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6 மாத காலத்திற்கு பிறகு தற்போது  ஓரளவு நிலைமை சீராகி வருகிறது.



இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன்  அமைப்பின் புதிய தளபதியான சப்சார் அகமது மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி உட்பட 3 பேர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால், சைமோக் பகுதியில்  பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் புதிய தளபதி சப்சார் அகமது சுட்டுக்  கொல்லப்பட்டான்.

மற்ற 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். சப்சார் அகமது  கொல்லப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து டிரால் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு  பகுதியில் நேற்று வன்முறை ஆரம்பித்தது.

என்கவுன்டருக்கு இடையூறாக,  பாதுகாப்பு படையினர் மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசி தாக்கினர். மேலும்  வாட்ஸ் அப் மூலமாக, உடனடியாக டிரால் பகுதிக்கு விரைந்து வருமாறு  வன்முறையாளர்கள் பலருக்கு தகவல் அனுப்பினர்.

அனந்த்நக் மாவட்ட  பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர  போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மாநிலம் முழுவதும்  குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தீவிரவாதிகள் பலி

இதற்கிடையே காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கடந்த 24 மணி நேரத்தில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இன்று பூஞ்ச் செக்டாரில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற மேலும் ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

பாக்.

கண்டனம்

ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அப்பாவி இளைஞர்களை இந்திய ராணுவம் வேட்டையாடி வருகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஸ் அஜிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்டர்நெட் சேவை ரத்து

காஷ்மீரில் அடுத்த 12 மணி நேரத்திற்கு செல்போன் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. வன்முறை பரவுவதை தடுப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட 22 இணையதளங்களை ஒருமாத காலத்திற்கு காஷ்மீர் அரசு முடக்கி வைத்திருந்தது. மேலும் நகரில் பல்வேறு பகுதிகள் உள்பட புல்வாமா, டிரால் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழுஅடைப்பு

இந்த சூழலில் சப்சார் அகமது உள்ளிட்டோர் கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாத அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் வருகிற 30ம் தேதி மிகப் பெரிய கண்டன பேரணி நடத்தவும் பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இதனால் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.

.

மூலக்கதை