கெஜ்ரிவாலுக்கு எதிராக லோக் ஆயுக்தாவில் கபில் மிஷ்ரா பரபரப்பு வாக்குமூலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கெஜ்ரிவாலுக்கு எதிராக லோக் ஆயுக்தாவில் கபில் மிஷ்ரா பரபரப்பு வாக்குமூலம்

புதுடெல்லி: முதல்வர் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் கபில் மிஷ்ரா, இதுகுறித்து லோக் ஆயுக்தாவில் வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து ரூ. 2 கோடி வாங்கியதாகவும், இதை தான் நேரில் பார்த்ததாகவும் ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கபில் மிஷ்ரா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுபற்றி ஆளுநரிடம் புகார் தெரிவித்ததுடன் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், ஆம் ஆத்மிக்கு வரும் நன்கொடை, அமைச்சர்களின் வெளிநாடு பயணம் குறித்து விசாரிக்க கோரி கபில் மிஷ்ரா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.



இந்நிலையில், அரசுத்துறையில் பணிபுரிவோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கபில் மிஷ்ரா நேற்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். அமைச்சரிடம் கெஜ்ரிவால் பணம் வாங்கியது, பொதுப்பணித்துறையில் நடந்த ஊழல் உள்ளிட்ட 7 விஷயங்கள் தொடர்பாக லோக் ஆயுக்தா முன்பு அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவால் பதவி விலக வேண்டுமென பாஜ வலியுறுத்தியுள்ளது.



இதுகுறித்து டெல்லி மாநில பாஜ தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், ‘‘கெஜ்ரிவாலுக்கு எதிராக லோக் ஆயுக்தாவில் வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்வது சரியாக இருக்காது.

எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார். லஞ்சம், ஊழல் புகார்களில் சிக்கும் அரசு பணியாளர்கள் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என ஆரம்பத்தில் தீவிரமாக வலியுறுத்தியவர் கெஜ்ரிவால்.

தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கெஜ்ரிவாலை லோக் ஆயுக்தா விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை