தாவூத் இப்ராகிம் உறவினர் திருமணத்தில் பாஜ அமைச்சர் கலந்து கொண்டது ஏன்? காங்கிரஸ் கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாவூத் இப்ராகிம் உறவினர் திருமணத்தில் பாஜ அமைச்சர் கலந்து கொண்டது ஏன்? காங்கிரஸ் கேள்வி

மும்பை: பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரியின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரின் மகனுக்கும்  கடந்த 19ம் தேதி நாசிக்கில் திருமணம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிரீஸ் மகாஜன், எம்எல்ஏக்கள் தேவ்யானி  பராந்தி, பாலாஷாகிப் ஷனாப், ஹிராய், மற்றும் மேயர் ரஞ்சனா பானாசி, துணை மேயர் பிரதா மேஷ் கீதே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள். தவிர அம்மாநில போலீசார் உள்பட பல்வேறு முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து மீடியாக்களில் செய்திகள் வெளியானதையொட்டி பெரும் சர்ச்சையானது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் விளக்கமளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின்  சாவந்த்  கூறுகையில், ‘தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அந்த திருமணத்திற்கு சென்றுள்ளனர். யார் யார் இன்னும் தாவூத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை  இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக மராட்டிய  முதல்வர்  உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார். இதற்கு மராட்டிய மாநில காவல்துறை தலைமை இயக்குனர் சதீஷ் மாத்தூர் கூறுகையில், ‘திருமணத்தில் பங்கேற்றவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக நாசிக் போலீசாரிடம் கேட்டுள்ளோம்.

அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் கிரீஷ் மகாஜன் கூறுகையில்,’திருமணத்தில் கலந்து கொண்டது உண்மைதான். மணமகனின் தந்தை சமூக சேவகர் என்பதால் அந்த திருமணத்திற்கு சென்றேன்.

தவிர நான் அமைச்சர் என்பதால் அழைப்பிதழ் கொடுக்கும் அனைத்து மக்களின் விழாக்களுக்கும் செல்வது வழக்கம். அதன் அடிப்படையிலேயே சென்றேன்’ என்று விளக்கமளித்துள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தாவூத்தை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நிலையில் பாஜக அமைச்சர், எம்எல்ஏக்கள் தாவூத்தின் உறவினர்களுடன் நெருக்கமாக இருக்கும் விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்து கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

.

மூலக்கதை