திருப்பதி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இணையதள சேவையை மேம்படுத்த நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இணையதள சேவையை மேம்படுத்த நடவடிக்கை

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இணையதள சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தரிசனம், அறைகள் ஒதுக்கீடு போன்றவற்றை எளிதாக்கும் வகையில், பக்தர்களின் வசதிக்காக இணையதள சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் தரிசனம், அறைகள் ஒதுக்கீடு, லட்டு பிரசாதம், நன்கொடை போன்ற பல்வேறு சேவைகளுக்கான இணையதள சேவையை சுலபமாகவும், சிரமமும் இல்லாத வகையில் மேம்படுத்த வேண்டும். சட்டத்துறையில் உள்ள அனைத்து வழக்குகளையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

அவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வழக்குகளை உடனுக்குடன் ஆலோசித்து விரைவாக முடிக்க வேண்டும். சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் குறித்து பதிவு செய்து வருவதையும் டிஜிட்டலாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை