கால்வாய்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை : முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்வாய்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை : முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருமலை: நீர்வரத்து கால்வாய்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.   ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: கிராமம் முதல் அனைத்து நகரங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக சிறப்பு திட்டம் தயாரிக்க வேண்டும். குடிநீருக்கு என தனி பிரிவு அமைக்க வேண்டும்.

இதன்மூலம் நேரடியாக நிதி ஒதுக்கி குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுகுறித்து கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

அடுத்து வரும் 6 மாதத்துக்கு மழை இருக்கும் என்பதால் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும். பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

குடிநீர் பிரச்னை குறித்து வரும் தொலைபேசி அழைப்புகளை அதிகாரிகள் அலட்சியம் செய்யக்கூடாது.

மேலும் ஒரு சொட்டு மழை நீரையும் வீணாக்காமல் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில் ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை தூர் வாரவும், நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கவும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறினால் அது நேரடியாக அடுத்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்லும்படி நீர்வரத்து கால்வாய்களை தயார் செய்யவேண்டும்.

ஒரு ஏரியில் இருந்து மறு ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சேதம் செய்தாலோ, அதை உடைத்து தண்ணீர் திருடினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


.

மூலக்கதை