நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு மன்மோகன் சிங்குக்கு தவறான பரிந்துரை அனுப்பியுள்ளார் குப்தா

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ‘‘நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, நிலக்கரித்துறை செயலாளராக இருந்த எச்.சி.குப்தா தவறான பரிந்துரைகளை செய்துள்ளார்’’ என டெல்லி சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்தது. மத்திய பிரதேச மாநிலத்தில், ‘கமல் ஸ்பாஞ்சி ஸ்டீல் அண்ட் பவர்’ நிறுவனத்துக்கு தெஸ்கோரா பி ருத்தபுரியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, கூடுதல் செயலாளராக இருந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமாரியா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்தது.டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில்  எச்.சி.குப்தா உட்பட 3 அதிகாரிகளும் குற்றவாளிகளாக நீதிபதி பரத் பராசார் கடந்த 19ம் தேதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிபதி பரத் பரசார் கூறியிருப்பதாவது: நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு விஷயத்தில், முன்னாள் செயலாளர் குப்தா, தவறான பரிந்துரைகளை நிலக்கரித்துறைக்கு பொறுப்பு வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ளார். இந்த பரிந்துரையில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கும் என மன்மோகன் சிங் நினைத்துப் பார்க்க வாய்ப்பில்லை. விண்ணப்பங்கள் அனைத்தும் நிலக்கரித்துறை அமைச்சத்தில் சரிபார்க்கப்பட்டிருக்கும் என்ற எண்ணத்தில்தான் கண்காணிப்பு குழுவின் தலைவராக உள்ள குப்தாவின் பரிந்துரைக்கு முன்னாள் பிரதமர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை