காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டப்படி தீர்வு: சிபிஎம்-சிபிஐ கூட்டாக வலியுறுத்தல்

தினமணி  தினமணி

புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக, சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும், சிபிஐ பொதுச் செயலர் சுதாகர் ரெட்டியும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 60 ஆண்டுகளாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், எல்லைப் பிரச்னை மட்டுமன்றி, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சிப் பண்புகளின் சோதனைக் களமாகவும் உள்ளது.

இதனிடையே, அந்த மாநிலத்தில் ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர் பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து, கடந்த இரு மாதங்களாக அந்த மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பாதுகாப்புப் படையினர் பெல்லட் ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதில் பலர் பார்வையிழந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். தொடரும் ஒவ்வொரு சாவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக மேலும் பெரிதாக்குகிறது. இந்தப் பதற்றமான சூழலில் ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த பிரச்னையை ஆராய வேண்டியுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தும், சுயாட்சி உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பறிக்கப்பட்டுள்ள அந்த உரிமைகளை அந்த மாநிலத்துக்குத் திருப்பித் தர வேண்டும்.

குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீடிப்பதை அந்த மாநில மக்கள் ஏற்கும் வகையில் ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். அதேசமயம், கடந்த 1948-ஆம் ஆண்டில் அந்த மாநிலத்துக்கும், மாநில மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

எனவே, நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாக, முதலில் பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். இரண்டாவதாக, காஷ்மீரில் மக்கள் வசிக்கும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதுடன், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அடுத்ததாக, பொதுமக்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் அளிப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர, வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் துல்ஹஸ்தி, உரி மின்திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும்; ஸ்ரீநகரில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றைத் தொடங்க வேண்டும்.

காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்களாகவும் சித்திரிக்கப்படும் போக்கு முடிவுக்கு வர வேண்டும்.

மேலும், காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் அடிப்படையில் அந்த மாநிலத்தில் உள்ள அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மாறுபட்ட நிலைப்பாடின்றி இந்தியா முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சீதாராம் யெச்சூரியும், சுதாகர் ரெட்டியும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை