சசிகலா புஷ்பா எம்.பி. முன்ஜாமீன் மனு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தினமணி  தினமணி
சசிகலா புஷ்பா எம்.பி. முன்ஜாமீன் மனு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சசிகலா புஷ்பா எம்பி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய இருவரும் தங்களுக்கு சசிகலா புஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, சசிகலா புஷ்பாவிடம், நீங்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள வக்காலத்தில் இருப்பது உங்களுடைய கையெழுத்து இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நாளன்று நீங்கள் வெளிநாட்டில் இருந்ததாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நீதிபதி கேட்டார்.

அதற்கு சசிகலா புஷ்பா, நான் தில்லியில் இருக்கும்போது வக்காலத்தில் கையெழுத்திட்டு எனது கணவர் மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தேன். வழக்குரைஞர் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டேன் என்று தெரிவிக்கப்பட்ட கருத்தில் சிறு தவறு நடந்துள்ளது என்றார்.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி வாதிடுகையில், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்குரைஞர் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை மாலைக்கு ஒத்தி வைத்தார்.

பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், போலீஸார் தரப்பில் தகுதி அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்காமல், வழக்கை திசை திருப்பும் நோக்கில் மனுதாரர் வெளிநாடு தப்பிச் சென்றார் என்பது போன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த பின்னர் தான், மனுதாரர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

 

மூலக்கதை