​எம்.எல்.ஏ பதவியிலிருந்து பழ.கருப்பையா ராஜினாமா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​எம்.எல்.ஏ பதவியிலிருந்து பழ.கருப்பையா ராஜினாமா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், துக்ளக் விழாவில் தான் பேசியது பெரிய தவறொன்றும் இல்லை என்று தெரிவித்தார். 

தன்னை காரணம் கேட்காமல் நீக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள கருப்பையா, முதல்வரை பல முறை சந்திக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை என்றார்.

அதிமுகவின் அரசியல் அணுகுமுறை தனக்கு பொருந்தாததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்கிய உடன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

எனவே, சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதற்காக தான் கைப்பட எழுதிய விலகல் கடிதத்தை பேரவை தலைவருக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மது விற்பனையால் வரும் வருவாய் அரசுக்கு உகந்ததல்ல என்று குற்றஞ்சாட்டியுள்ள கருப்பையா , அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்த செய்தியாளர் சந்திப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல என்று பழ.கருப்பையா விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது எம்.எல்.ஏ. வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்த கருப்பையா, துறைமுகம் தொகுதியில் பான்பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் மொத்தமாக சப்ளை செய்யப்படுவதாகவும், ஆனால், தன்னால் எதையும் தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்காக தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை