தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் 12 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்காத 12 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்துள்ளது.

மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதில்,  குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக பிடிவாரண்ட்டை பிறப்பிக்க கோரி சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல் பத்திரிகை அலுவலக எரிப்பில் உயிரிழந்த வினோத்தின் தாயார் பூங்கொடியும் சீராய்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை திட்டமிட்டு இழுத்தடிக்கின்றனர் எனவும், இதனால் குற்றம்சாட்டப்பவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கக் சிபிஐ கோரியது. 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.ஆர். சிவக்குமார், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருச்செல்வம்  உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை