இலங்கையில் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன? புதிய ஆவணப்படத்தை வெளியிட்டது சேனல்4

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
இலங்கையில் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன? புதிய ஆவணப்படத்தை வெளியிட்டது சேனல்4

இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் தற்போதைய நிலை குறித்து லண்டனை சேர்ந்த CHANNEL FOUR தொலைக்காட்சி "இன்னும் இறைந்து  கிடக்கும் செருப்புகள்" என்ற பெயரில் புதிய ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. 

CHANNEL FOUR-ன் மூத்த செய்தியாளர் ஜான் ஸ்னோ, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்து, இந்த ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று "இன்னும் இறைந்து கிடக்கும் செருப்புகள்" என்ற அந்த ஆவணப்படம் கூறுகிறது. 

குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அத்யாவசிய தேவைகள் கூட இன்னும் பூர்த்தியாகாமல் இருப்பதாக அங்குள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டதாகவோ, காணாமல் போனதாகவோ கூறப்படும் தங்களது உறவுகள், எப்போது திரும்பி வருவார்கள் என்று கண்ணீரோடு காத்திருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். பொங்கலன்று விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இவர்களுக்கு இலங்கை அரசின் புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பன்னாட்டு விசாரணைக்கு சர்வதேச நாடுகளும், வடக்கு மாகாண மக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும், இலங்கை அரசு இதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று குற்றம்சாட்டுகிறார் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.

இதனிடையே, இறுதி கட்டப் போரில் தமிழர்கள் காணாமல் போனதாக கூறப்படுவது உண்மை தான் என்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. ஆனால், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என திரும்பத் திரும்ப கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், இது மிகைப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

மூலக்கதை