மின்னல் தாக்கமும் பாதுகாப்பு வழிமுறைகளும்

  TAMIL CNN
மின்னல் தாக்கமும் பாதுகாப்பு வழிமுறைகளும்

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய 26.12.2004ம் திகதியின் சுனாமி அனர்த்தத்திற்குப் பின்பு இலங்கையில் அனர்த்தம் என்னும் பதம் பிரபலமாகி விட்டதுடன், அனர்த்தம் தொடர்பாக மக்களும் குறிப்பிட்டளவு விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும் சில அனர்த்தங்கள் தொடர்பாகப் போதியளவு அறிவின்மையால் இன்றும் அவற்றால் ஏற்படக் கூடிய தாக்கம் அதிகரித்திருப்பதை காணலாம்.
இலங்கைத் தீவானது கடந்த தசாப்தங்களில் சுனாமி, மண்சரிவு, வெள்ளம், சூறாவளி, வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களால் அதிகளவு உயிரிழப்பையும், சொத்திழப்பையும் சந்தித்திருக்கின்றது.

இலங்கை வெப்ப வலயத்தில் இருப்பதால் இதேபோன்று இலங்கை எதிர்நோக்குகின்ற மற்றுமொரு இயற்கை அளர்த்தம் இடிமின்னல் ஆகும். இதனால் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை பல பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறான அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற இழப்புக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் உரிய காலப் பகுதியில் முன்னறிவிப்புக்களை வழங்கி, பாதுகாப்புப் பெறும் வழிகள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதனூடாக இழப்புக்களைக் குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மின்னல் எவ்வாறு தோன்றுகின்றது

முகில்களில் உள்ள நீர் துணிக்கைகள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதி உடைகின்றன. இவ்வாறு உடையும் போது சிறு துணிக்கைகள் நேர் ஏற்றம் (+) அடையும் அதேவேளை பெரிய துணிக்கைகள் மறை (-) ஏற்றம் அடைகின்றன.

புவியீர்ப்பு மற்றும் காற்றசைவினால் இந்த ஏற்றம் பெற்ற நேர், மறை துணிக்கைகள் வேறாக்கப்படடு நேர் ஏற்றம் பெற்ற துணிக்கைகள் ஒன்றாக சேர்ந்து முகிலின் மேல் பகுதியில் இருக்கத்தக்கதாகவும், அதேபோல் மறை ஏற்றம் பெற்ற துணிக்கைகள் ஒன்றாக சேர்ந்து முகிலின் கீழ்பகுதியில் இருக்கத்தக்கதாகவும் மாறுகின்றன. முகிலின் கீழ் பகுதி மறை ஏற்றம் பெறுவதால் புவியின் மேல் பகுதி நேர் ஏற்றம் தூண்டப்படுகிறது.

முகில் கூட்டம் புவி
இந்த வேறாக்கத்தினால் மிகப் பிரமாண்டமான மின்சக்தி (10.8 வோல்ட் மின்சக்தி) முகில்களுக்கிடையிலும், முகில் – புவிக்கிடையிலும் உற்பத்தியாகின்றது. கடைசியாக வளியில் உள்ள தடை உடையும் போது இந்த மின் சக்தி சடுதியாக மின்கற்றைகளை வெளிவிடுகின்றது . இதுவே மின்னல் ஆகும். இந்த மின் கற்றைகளில் 10.8 (100,000,000) வோல்ட்டும், 25,000Aதொடக்கம் 30,000 A வரையான அளவுள்ள மின்சாரம் பாய்கின்றது.

நாம் அன்றாடம் வீட்டில் பாவிக்கும் மின்சாரம் 30 A உம் 220 வோல்ட்டுமே ஆகும். இந்த மின்சாரத்தை மின்னலினால் ஏற்படும் மின்சாரத்தோடு ஒப்பிடும் போது எத்தனை மடங்கு பெரியது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மின்னல் இடம்பெறும் காலங்களும் நேரமும்

இலங்கையில் இடி மின்னலின் அதிகளவான தாக்கம் இரு பருவப் பெயர்ச்சி மழை காலங்களுக்கு இடைப்பட்ட மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர், நவம்பர் காலங்களில் அதிகளவாக உணரப்பட்டுள்ளது. அத்தோடு வரட்சி காலத்தில் மழை பெய்யும் போதும், சூறாவளி மழை பெய்யும் போதும் அதிகமாக இடம்பெறும்.

பருவப் பெயர்ச்சி மழை காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் காலையில் அதிகளவில் வெயிலும், மாலையில் வானம் கரிய நிறமாகி இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்வதை அவதானிக்கலாம். இவ்வாறு ஏற்படும் மின்னலே மேற் சொல்லப்பட்டதாகும்.

இலங்கையில் இலங்கைக்கு மேலாக பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரையானன காலப் பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் இடி, மின்னல் இடம்பெறுகிறது. இந்த நேரப் பகுதியில் மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும்.
ஏனெனில் மாலைப் பொழுதிலேயே அதிகமான மக்கள், விவசாயிகள், அலுவலர்கள், கூலிவேலை செய்வோர், கொழுந்து பறிப்பவர்கள் வீடுகளுக்கு வெளியிலேயே காணப்படுகின்றனர். இதனால் இடி மின்னலால் ஏற்படும் தாக்கமும் உயிரிழப்பும் கணிசமான அளவு அதிகமாகவே உள்ளது.

ஒருநாள் பொழுதில் ஏனைய பிரதேசங்களைவிட மலைநாட்டு பிரதேசம் (உயரத்தில் இருப்பதால்) முதலில் வெப்பமடைகின்றது. இதனாலேயே நாவல, எல்பிட்டிய, புசல்லாவ போன்ற பிரதேசங்களில் அதிகளவான இடி மின்னல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.

உயிரினங்களை மின்னல் தாக்கக் கூடிய பிரதான ஐந்து வழிகள்

1) நேரடித் தாக்கம்:

திறந்தவெளியில் முகிலில் இருந்து வருகின்ற மின்னல் கற்றைகள் நேரடியாகத் தாக்குதல்

2) தொடுகை வோல்ட் அளவு

புவியை நோக்கிய மின் கற்றைகள் மரம், கட்டடம், கம்பி போன்ற பொருட்களுடாகப் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றுடன் தொடுகையில் இருக்கும் போது அவற்றினூடாக மின் கடத்தப்படும்.

3) பகுதி நகர்வு:

புவியின் மீது மின்னைக் கடத்தும் பொருட்களுக்கு அண்மையில் உள்ள போது, பொருளுக்கு இடையேயான இடைவெளியில் பகுதிகளாக மின்கற்றைகள் பாய்ந்து தாக்குதல்.

4) படிமுறை வோல்ட் அளவு:
புவியும் உடலின் பாகமும் தொடுகையில் உள்ள போது நிகழக் கூடிய விபத்தாகும். புவியின் மீது மின்தாக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து பரவிச் செல்கின்ற மின்கற்றைகள் அண்மையில் தொடுகையில் உள்ள உடற் பாகத்தினூடாக நுழைந்து உடலின் மற்றுமொரு இடத்தினூடாக வெளியேறி மீண்டும் புவியை நோக்கிச் செல்கிறது.

உடலினூடாக மின்சாரம் பயணிப்பதால் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான அனர்த்தம் அதிகமாகக் காணப்படுவது மின்தாக்கம் நிகழ்ந்த இடத்திற்கு அண்மையில் இருக்கின்ற சந்தர்ப்பங்கள் ஆகும்.

5) அதிக வோல்ற்றாலான நகர்வு:

மின்வடங்கள், மின்னைக்கடத்துகின்ற பொருட்கள் பெரிய கட்டிடம்/ வீடு போன்ற பெரிய மின்சுற்று ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது மின் தாக்கத்தினால் இம்மின் கம்பிகள் மின்னைக் கடத்தி, வீட்டு மின் உபகரணங்களுக்கும் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகின்றது.

மின்னலானது ஓர் அனர்த்தமாகவும் மனிதன், விலங்கு போன்ற உயரினங்களுக்குப் பாதிப்பையும் இறப்பையும், சொத்துக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. எனவே, இவ்வனர்த்தத்திலிருந்து ஏற்படக் கூடிய இழப்பை குறைப்பதற்கு/ தவிர்ப்பதற்குச் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இடி மின்னலின் போது ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பதற்கு/ குறைப்பதற்கு உரிய வழிகள்:

1) கட்டடங்கள், வீடுகளின் மின்சுற்றுக்குரிய புவிக்கம்பி உரிய முறையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

2) வீட்டிற்கும் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மரங்களுக்கும் இடையில் மின்சாரம் பாயக் கூடிய வயர்கள் பொருத்தப்பட்டிருந்தால்/ இணைக்கப்பட்டிருந்தால் அத்தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்.

3) மின்சார உபகரணங்களைப் பிரதான மின் சுற்றிலிருந்து கழற்றி/ துண்டித்து வைக்க வேண்டும்.

4) தொலைக்காட்சிப் பெட்டிகளின் அன்டானாக்களைத் துண்டித்து வைப்பதுடன் அன்டனா கட்டப்பட்டுள்ள கம்பியை நேரடியாகப் புவியுடன் தொடுகையுற வைக்க வேண்டும்.

5) மின்னல் ஏற்படும் போது மின்சார உபகரணங்கள், குளிர் சாதனப் பெட்டி, மின்னழுத்தி, தொலைக்காட்சி, வானொலி, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை இயலுமான அளவு தொடுவதை அல்லது கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6) மின்னல் அடிக்கும் போது திறந்தவெளியில் நிற்காமல், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மின்னல் ஒளி ஏற்பட்டு 15 செக்கன்களின் பின்னரே இடி மின்னல் ஒலி கேட்கும். எனவே, விரைவாக, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

7) திறந்த வெளிகளில் வயல்கள், தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம், கடற்கரை போன்ற இடங்களில் சுற்றித் திரிவதைத் தவிர்த்தல், விசேடமாக திறந்தவெளியில் இரும்பினால் தயாரிக்கப்பட்ட மண்வெட்டி, கத்தி போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், திறந்த வெளியில் நிற்கும் போது பாதுகாப்பான இடம் இல்லையாயின் குனிந்து இருத்தல் ஆகிய வண்ணம் செயற்பட வேண்டும்.

8) உயர் நிலப் பிரதேசம் மற்றும் திறந்தவெளியில் உள்ள உயர்ந்த மரங்களுக்குக் கீழுள்ள மனைகளுக்கு பாதுகாப்புத் தேடிச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

9) குனிந்திருப்பதன் மூலம் அல்லது படுப்பதன் மூலம் உடம்பின் உயரத்தை குறைக்க வேண்டும்.

10) குளங்கள், கடலில் படகில் இருக்கும் போது இயலுமான அளவு உயரத்தை குறைத்தல், பாதுகாப்புக்காக பாலத்தின் கீழ் நங்கூரமிட்டு நிறுத்தி, திறந்தவெளி மண்டலத்துடன் நேரடித் தொடுகையுறுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

11) திறந்தவெளியில் குதிரை ஓட்டுதல், துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரம் போன்ற திறந்த வாகனங்களை ஒட்டுவதைத் தவிர்த்தல் வேண்டும். இடி மின்னலின் போது மூடிய வாகனங்களில் பயணிக்கும் போது பாதிப்பு ஏற்படுத்தாது.

12) இரும்பினாலான தூண்கள், கட்டடங்கள் போன்றவற்றைத் தொடுதல், அருகில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

13) தொலைபேசி பாவிப்ப தைத் தவிர்த்து கொள்ளல் நன்று.

இடி மின்னலால் ஏற்படும் மின்சாரம் உடம்பின் ஊடாகப் பாய்ந்து வெளியேறுகின்ற சூழலையும் வழியையும் பொறுத்தே அதனால் ஏற்படுகின்ற தாக்கம் அமையும்.

ஒருவர் இடி மின்னலினால் பாதிக்கப்படும் போது வைத்தியம் செய்யப்படுவதற்கு முன்னால் உடனடியாக முதலுதவி வழங்கப்பட வேண்டும். இடி மின்னல் கற்றைகளால் ஒருவர் பாதிக்கப்படும் போது தற்காலிகமாக அவரது உடம்பு செயலற்றுப் போகும்.

கோபுரங்களில் இடி தாங்கி பொருத்தப்பட்டிருப்பதால் அரகில் வசிப்பவர்கள் பயப்பட வேண்டியதில்லை. நிலை குத்தாகப் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கியில் இருந்து 45 பாகை ஊடான பிரதேசம் பாதுகாப்பான பிரதேசம் ஆகும்.

மூலக்கதை