'பழைய சோறு' குறித்த அறிவியல் கருத்தரங்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

  தினத்தந்தி
பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் “பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, விழா பேரூரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 2009-ம் ஆண்டு இன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அன்றைய தமிழ்நாடு துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்தினை இந்திய மருத்துவ வரலாற்று கவுன்சில் (ICMR) இணைந்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இம்மையம் 2022-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையாக மேம்படுத்தப்பட்டது. பழைய சோறு என்பது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே தொண்டு தொட்டு வருகின்ற ஒரு உணவாகும். இரவு ஊற வைத்த உணவை காலையில் உட்கொள்வது தான் பழைய சோறு. இந்த சோறு மூலம் பல்வேறு சத்துகள் நமது உடலில் செல்கின்றது. பழைய சோறு மூலம் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்சத்துக்கள் இருப்பதை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நார்ச்சத்துகள் 631% அதிகமாகவும், புரதச்சத்து 24% அதிகமாகவும், நுண் சத்துக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், வைட்டமின் - பி சத்துகள் இருக்கிறது. மேலும், இரும்பு சத்துகளை 12 மடங்கு அதிகமாக உடலில் எடுத்துக் கொள்ள செய்கிறது. பழைய சோற்றில் இருக்கும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் குடலில் சேர்ந்து 2,000-க்கும் மேற்பட்ட உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பது, நீரிழிவு நோய் வரமால் தடுப்பது, குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மற்றும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வதால் குழந்தை நன்றாக வளர்கிறது. குறை பிரசவம் வெகுவாக குறைகிறது, கர்ப்பகால நீரிழிவு நோய் வருவது குறைகிறது, கர்ப்பகால அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. இருதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது, இரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஒரு அரணாக இருந்து நுண்சத்துகள் மற்றும் நீர் சத்துகள் வெளியேறாமல் பாதுகாக்கிறது. பல்வேறு வகையான வயிற்றுப்போக்கு நோய்கள், கிருமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட நோய்க்குறி, வயிறு வீக்கம் மற்றும் வாயு பிடிப்பு போன்ற நோய்களிலிருந்து குணமாவதற்கு உதவுகிறது. இப்படியாக உடல் நலத்திற்கு பாதுகாப்பான மிகச் சிறந்த உணவாக பழைய சோறு இருக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி ரூ.2.44 கோடி செலவில் 11.03.2022 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை” தொடங்கப்பட்டு பழைய சோறு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பழைய சோறு சிகிச்சை மூலம் இரைப்பை சிகிச்சை மேற்கொண்டவர்களிடமும் உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சரின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.44 கோடி செலவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. மேலும் பழைய சோறு குறித்து நான் உங்களுக்கு எடுத்துரைக்க தகுதி படைத்தவராக இருப்பதை நான் அறிகிறேன். நான் சிறுவயதில் இருந்தே வாரத்திற்கு 2 முறை பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். இப்போது இந்த கருத்தரங்கத்தின் மூலம் பழைய சோறு மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் அறிந்தபிறகு வாரத்தின் 7 நாட்களும் பழைய சோறு சாப்பிடுவது என்பது நான் முடிவு செய்திருக்கிறேன். காலையில் இதனை எடுத்துக்கொள்ளும்போது தாய்மார்களுக்கு சமைக்கிற பணி என்பது 100 சதவீதம் குறைகிறது. இதனால் சமைக்கும் நேரமும் மிச்சப்படுகிறது, மேலும் பொருளாதாரமும் மிச்சப்படுகிறது. ஒரு மருத்துவர் 5 ஆண்டு காலம் உழைத்து பல்வேறு வகையில் இந்த பழைய சோற்றினை சாப்பிட்டவர்களுடன் உரையாடி, அவர்கள் பெற்ற பலனை எல்லாம் அனுபவ ரீதியிலாகவே உணர்ந்த காரணத்தினால் தான் இதை செய்து காட்டியுள்ளார்கள். எனவே இந்த ஆராய்ச்சி பெரிய அளவில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை