வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பம்

  தினத்தந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நேற்று வரை சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7-ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர். புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பித்தனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதற்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 4.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

மூலக்கதை