தோட்டக்கலைத்துறையை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - சீமான்

  தினத்தந்தி
தோட்டக்கலைத்துறையை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்  சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு வேளாண்துறையின் கீழ் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. பழங்கள், காய்கறிகள், பூக்கள், காளான்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் தோட்டக்கலைத்துறையை, மற்ற துறைகளுடன் ஒன்றாக இணைப்பது அதன் தனித்துவத்தை இழக்கச் செய்யும் கொடுஞ்செயலாகும். அரசு வேளாண்துறையின் கீழ் ஒரு வேளாண் அலுவலர் சராசரியாக 6 கிராமங்களைக் கவனித்துவரும் நிலையில், வேளாண் துறையின் உட்பிரிவு துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு அலுவலருக்கு 3 கிராமங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால், விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை எளிதில் அணுக முடியும் என்று அரசு கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளில் தனித்தனி நிபுணத்துவம் பெற்றவர்கள். கடந்த 17 ஆண்டுகளாகத் தங்கள் துறைகளில் அனுபவம் பெற்ற அதிகாரிகளிடம், அவர்களுக்குத் தொடர்பில்லாத மற்றொரு துறையின் தொழில்நுட்ப ஆலோசனைகளைக் கேட்கச் சொல்வது, விவசாயிகளைத் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்லும் ஆபத்துடையதாகும். தமிழ்நாடு அரசால் கடந்த 2008-ம் ஆண்டு வேளாண் துறையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட தோட்டக்கலைத்துறை, கடந்த 17 ஆண்டுகளாக வேளாண் உற்பத்தியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வெறும் 14 சதவீதம் சாகுபடி பரப்பில் மட்டுமே தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டாலும், மொத்த வேளாண் உற்பத்தியில் 32.5 சதவீதமும், விளைபொருள் ஏற்றுமதியில் 65 சதவீதமும் பங்களிக்கிறது. இச்சூழலில், தனித்துவமிக்கத் துறைகளை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது மறைமுகமாக தோட்டக்கலைத்துறையின் சீரான வளர்ச்சியை முடக்கும் செயலாகும். ஏற்கனவே, தமிழ்நாட்டின் வேளாண்துறை திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற செயல்பாடுகளால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்கும் முன் கடந்த 2020-21ம் ஆண்டில் 4.5 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.09 சதவீதம் என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 2021-22 நிதியாண்டில் 10 சதவீதமாக இருந்த தானிய உற்பத்தி தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வேளாண்மை பெருமளவு சீரழிந்துள்ள நிலையில், முற்று முழுதாக வீழ்ந்துவிடாமல் காக்கும் துறையாகத் தோட்டக்கலைத்துறையே உள்ளது. அதனையும் அழிக்கும் திமுக அரசின் முயற்சியே தோட்டக்கலைத்துறையை மற்ற துறைகளுடன் ஒன்றிணைக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ஆகும். இந்தத் திட்டத்தால் தோட்டக்கலைத்துறையின் தனித்துவம், நிபுணத்துவம் முற்றாகப் பாதிக்கப்படும். திமுக அரசிற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் மீதும், வேளாண்துறை வளர்ச்சியின் மீதும் அக்கறை இருக்குமாயின், வேளாண்துறைகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, வேளாண்துறையில் ஏற்கனவே காலியாக உள்ள வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதே விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பதாக அமையும். ஆகவே, தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில், வேளாண்துறைகளை ஒன்றிணைப்பதைக் கைவிட்டு, தோட்டக்கலை மற்றும் வேளாண்துறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை