ஒடிசா: சட்டவிரோத கல்குவாரியில் உடைந்து விழுந்த பாறைகள்; பலர் பலி என அச்சம்

  தினத்தந்தி
ஒடிசா: சட்டவிரோத கல்குவாரியில் உடைந்து விழுந்த பாறைகள்; பலர் பலி என அச்சம்

புவனேஸ்வர், ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கோபால்பூர் கிராமம் அருகே மோதங்கா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் துளை போட்டு கற்களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பாறைகளின் பெரிய பகுதி உடைந்து, விழுந்தது. அது நொறுங்கி பரவி கிடந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல்கட்ட தகவலின்படி 2 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், உள்ளூர் தீயணைப்பு படையினரின் மீட்பு குழுக்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. ஒடிசாவின் பேரிடர் மீட்பு படை, மோப்ப நாய் குழு ஒன்றும் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இரவில் மீட்பு பணியை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. தொழிலாளர்களை தேடி கண்டுபிடிப்பதில் சிக்கல் காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது சட்டவிரோத கல்குவாரி என கூறப்படுகிறது. வெடி வைப்பதற்கான முறையான முன் அனுமதி இல்லை என கூறி இதனை மூடும்படி தேன்கனல் மாவட்ட சுரங்க அலுவலகம் நோட்டீஸ் ஒன்றை முன்பே அனுப்பி விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அதன்பின்னரும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் நடந்துள்ளன என கூறப்படுகிறது. #WATCH | Dhenkanal, Odisha: Massive explosion at stone quarry, labourers trapped. pic.twitter.com/v9snDuvaoR

மூலக்கதை