வெனிசுலா மீது அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு; கர்நாடகாவில் சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் போராட்டம்

  தினத்தந்தி
வெனிசுலா மீது அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு; கர்நாடகாவில் சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் போராட்டம்

கலபுரகி, அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. ஐ.நா. பொது சபையின் தலைவரான அன்னலேனா பேயர்போக் வெனிசுலா விவகாரம் பற்றி இன்று பேசும்போது, ஐ.நா. சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது கட்டாயம். அது இஷ்டத்திற்கு செயல்படுவதற்கானது அல்ல. ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என சுட்டி காட்டினார். வெனிசுலா விவகாரத்தில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் கலபுரகி நகரம் உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினர். அவர்கள் கட்சி கொடிகளை ஏந்தியபடியும், கோஷங்களையும் எழுப்பியும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோன்று மைசூரு நகரிலும் தொண்டர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

மூலக்கதை