குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது பைக் சாகசம் - மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்

  தினத்தந்தி
குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது பைக் சாகசம்  மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்

சென்னை, குமரி மாவட்டம், ஆலஞ்சி பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதாக கூறி கடந்த 24-ந்தேதி இளைஞர்கள் சிலர் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி சாலையில் சென்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அந்த இளைஞர்களை அங்குள்ள மக்கள் எச்சரித்தபோதும், அவர்கள் கேட்காமல் தொடர்ந்து தங்கள் பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், பொறுத்துப் பார்த்த மக்கள் வேறு வழியின்றி அந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர். இதன்படி சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டறிந்த போலீசார், அவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நாங்கள் நடந்துகொண்டோம். போலீசார் எங்களை பிடித்து எங்களுக்கு அறிவுரை கூறினார்கள். பொதுமக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனி இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை