ரெயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

  தினத்தந்தி
ரெயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி முதல் ரெயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரெயில் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நடுத்தர, ஏழை மற்றும் உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் வகையில், ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக இருக்கும் ரெயில்வே, மக்கள் நலனின் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, லாப நோக்கில் கட்டண உயர்வுகளுக்கான போக்குவரத்தாக மாறக் கூடாது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வரி சுமை ஆகியவற்றால் திணறும் நிலையில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்த ரெயில் கட்டண உயர்வு மேலும் சுமையையே ஏற்படுத்தும். மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு–தனியார் ஊழியர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும். எனவே, ரெயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி இந்த மக்கள் விரோத முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை