காவல், தீயணைப்பு துறைகள் சார்பில் ரூ.43.91 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, உள் (போக்குவரத்து) துறை ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.43.91 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், 9 புதிய காவல் நிலையங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 3 காவல் உட்கோட்டங்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.12.2025) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும் திறந்து வைத்தார். மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் 573.05 கோடி ரூபாய் செலவில் 3,418 காவலர் குடியிருப்புகள், 73.65 கோடி ரூபாய் செலவில் 56 காவல் நிலையக் கட்டிடங்கள், 170.19 கோடி ரூபாய் செலவில் 28 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் 55.19 கோடி ரூபாய் செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம் – சிந்தாதிரிப்பேட்டையில் 9 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் காவலர் விடுதி; கிருஷ்ணகிரியில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டையில் 11 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பாளையம் என மொத்தம் 22 கோடியே 8 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டிற்கான காவல் துறை மானியக் கோரிக்கையில், பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அதிகளவில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறைந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு காவல் துறையில் கோயம்புத்தூர் மாவட்டம் – நீலாம்பூர், சிவகங்கை மாவட்டம் – கீழடி, திருநெல்வேலி மாவட்டம் – மேலச்செவல், திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – களமருதூர், நாமக்கல் மாவட்டம் – கொக்கராயன்பேட்டை, மதுரை மாநகரம் – சிந்தாமணி மற்றும் மாடக்குளம், தருமபுரி மாவட்டம் – புலிக்கரை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 9 காவல் நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தல், பரந்த அதிகார வரம்பு, அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகர்ப்புர விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறைதீர் மனுக்கள், சாலை விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, தேவையான பணியிடங்களுடன் புதிதாக காவல் உட்கோட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டிற்கான காவல் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர், நாகப்பட்டினம் மாவட்டம் – வேளாங்கண்ணி மற்றும் நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று புதிய காவல் உட்கோட்டங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், சென்னை மாவட்டம் – செங்குன்றத்தில் 13 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 53 பணியாளர்கள் குடியிருப்புகள்; சென்னை மாவட்டம் – செங்குன்றத்தில் 3 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 16 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மாவட்டம் – புழலில் சென்னை மத்திய சிறை - I மற்றும் மத்திய சிறை - II ஆகிய சிறைகளின் அங்கீகரிக்கப்பட்ட அடைப்பு எண்ணிக்கை முறையே 1250 மற்றும் 2000 ஆகும். வேலை நாட்களில் தினமும் சுமார் 700 சிறைவாசிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறைவாசிகளை நேர்காணல் காண சிறைகளுக்கு வருகை புரிகின்றனர். நீண்ட நேர வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், காத்திருப்பு நேரத்தில் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் பொருட்டும், சென்னை மத்திய சிறை வளாகத்தில் 3300 சதுர அடி பரப்பளவில், 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பார்வையாளர்கள் காத்திருப்பு கூடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவிலில் 4 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
