"படையாண்ட மாவீரா" சினிமா விமர்சனம்

சென்னை, மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்று கதை. அரியலூரில் வாழும் கவுதமன், ஊர் மக்களுக்கு பாதுகாவலனாக திகழ்கிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் பகையை சம்பாதிக்கிறார்.போலீஸ் நிலையத்தில் ஒரு பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் அத்துமீற முயற்சிக்க, போலீஸ் நிலையத்தையே அடித்து நொறுக்குகிறார். இது புதிதாக இடமாற்றமாகி வந்த டி.எஸ்.பி. பாகுபலி பிரபாகருக்கு தலைவலியை உண்டாக்குகிறது. அரசியலில் களமிறங்கி எம்.எல்.ஏ. ஆகும் கவுதமன், ஒருகட்டத்தில் அரசையும் எதிர்க்கிறார். இதனால் கவுதமனை தீர்த்துக்கட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சூழ்ச்சி வலைகளை விரிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான கதை. அதிரடி - ஆக்ஷனில் களமிறங்கி இருக்கும் கவுதமன், முடிந்ததை செய்ய முயற்சித்து வெற்றி கண்டுள்ளார். போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கும் காட்சியில் அனல் தெறிக்கிறது. வசனங்களிலும் ஈர்ப்பு. பூஜிதாவுக்கு பெரியளவில் வேலை இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் வனப்பை (லேசாக) காட்டுகிறார். பாடல் காட்சிகளில் 'எட்டி... எட்டி...' பார்க்க வைக்கிறார். ஓரிரு காட்சிகளே வரும் சமுத்திரக்கனி, வழக்கம்போல வீரமான 'டயலாக்'குகளை பேசிவிட்டு போகிறார். சரண்யா பொன்வன்னனின் அனுபவ நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை. இளவயது கவுதமனாக வரும் தமிழ், திரையுலகுக்கு நல்வரவு. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. ஜி.வி.பிரகாசின் இசையும், சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசையும் படத்துக்கு துணை நிற்கிறது. வைரமுத்துவின் வரிகளில் பாடல்களும் சிறப்பு. 'பட்டாம்பூச்சி' பாடலுக்கு 'ஒன்ஸ்மோர்' சொல்லலாம். உணர்ச்சிபூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். அதேவேளை புதுமைகள் இல்லாத திரைக்கதையால், வழக்கமான கமர்ஷியல் படமாக நகருகிறது. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை திணித்தது போலாகி விட்டது. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சொல்ல நினைத்த விஷயங்களை சமரசமின்றி சொல்லி, பரபரப்பான கதைக்களத்தில் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் வ.கவுதமன். படையாண்ட மாவீரா - ஓவர் 'பில்டப்'.
மூலக்கதை
