திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

  தினத்தந்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழக அரசின் ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் 2024-ன் கீழ் 25 இருக்கைகள் கொண்ட தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லையோ அல்லது போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படவில்லையோ அந்த பகுதிகளில் எல்லாம் தனியார் மினி பஸ்களை இயக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாத அல்லது போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படாத 7 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஏர்போர்ட் நகர் முதல் விராலிப்பட்டி வரை, ஆலம்பட்டி முதல் அய்யலூர் பஸ் நிறுத்தம் வரை, வேடசந்தூர் பஸ் நிலையம் முதல் வெல்லாம்பட்டி வரை, சாலையூர் நால்ரோடு முதல் சுள்ளெறும்பு வரை, கொடைக்கானல் தாலுகா பெருமாள்மலை முதல் அடுக்கம் வரை, நிலக்கோட்டை போலீஸ் நிலையம் முதல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் வரை, கொடைக்கானல் தாலுகா பெருமாள்மலை முதல் கணேசபுரம் வரை அரசு பஸ்கள் இயக்கப்படாத வழித்தடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் மினி பஸ்களை இயக்க விரும்பும் வழித்தடங்களின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே வழித்தடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

மூலக்கதை